ETV Bharat / state

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்; நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் ஆஜர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 1:24 PM IST

Balveer singh Case: கைதிகளின் பற்களை கொடூரமாக பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் உள்பட 14 காவல்துறை அதிகாரிகள் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்; நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் ஆஜர்!
கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்; நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் ஆஜர்!

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்வதாக, அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சமூக ஊடகங்களில் புகார்கள் வெளியாகின.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் கடந்த மார்ச் 26ஆம் தேதி தனது விசாரணையைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து, மார்ச் 29ஆம் தேதி தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.

பின்னர், ஏப்ரல் 3ஆம் தேதி சார் ஆட்சியரின் இடைக்கால விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் உயர் மட்டக்குழு விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.

இதன் அடிப்படையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, கடந்த ஏப்ரல்10ஆம் தேதி தனது முதல் கட்ட விசாரணையும், அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் இரண்டாம் கட்ட விசாரணையை அம்பாசமுத்திரம் உட்கோட்ட பிரிவுகளில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி மற்றும் ADSP சங்கர் இந்த வழக்கு விசாரணயை மேற்கொண்டனர். இதனை அடுத்து, திருநெல்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் வேத நாராயணன், சூர்யா, வெங்கடேஷ் மற்றும் அருண்குமார் ஆகியோர்களது புகாரில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய உதவி காவல் துறை கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல்துறை ஆய்வாளர் ராஜகுமாரி, உதவி ஆய்வாளர்கள் முருகேஷ் உள்ளிட்ட 14 காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மீது இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் நான்கு வழக்குகளில் பல்வீர் சிங்கும், மற்றும் தலா இரண்டு வழக்குகளில் ஆய்வாளர் ராஜகுமாரியும், உதவி ஆய்வாளர்கள் முருகேஷ் மற்றும் ஆபிரகாம் ஜோசப் ஆகியோர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 294b, 342, 323, 324, 506(1), 109, 201, 167, 220, இளஞ்சிரார் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 75 ஆகிய பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தமாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல்வேறு சாட்சியங்களை நேரடியாகவும், காவல் நிலையத்திற்கும் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கும் அவர்கள் உட்படுத்தப்பட்டு, விசாரணை அதிகாரிகள் தங்களது தரப்பு விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த விவகாரம் தொடர்பான சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த 4 வழக்குகள், நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மற்றும் வழக்கில் தொடர்புடைய காவல்துறையைச் சார்ந்த சிலர், இன்று சரியாக காலை 10.30 மணி அளவில் ஆஜராகினர்.

தொடர்ந்து, நீதிமன்றத்தில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இச்சம்பவத்திற்கு பிறகு இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி பல்வீர் சிங், முதல்முறையாக வழக்கு விசாரணைக்காக நெல்லை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.