ETV Bharat / state

விபத்து ஏற்பட்டது போல் நடித்து நூதன கொள்ளையடித்த கும்பல் கைது!

author img

By

Published : Mar 6, 2020, 10:38 PM IST

திருநெல்வேலி: தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் விபத்து ஏற்பட்டது போன்று நடித்து, காப்பாற்ற வருபவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களைத் திருடிய கும்பலைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

bike_theft
bike_theft

திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையையொட்டி தாழையுத்து, கக்கன் நகர், ரெட்டியார்பட்டி ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. இவை அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் என்பதால், அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டது போன்று நடித்து அருகில் வருபவர்களைத் தாக்கி அவர்களிடமிருந்து செல்ஃபோன், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஒரு கும்பல் பறித்துச் சென்றுள்ளது.

கடந்த திங்கள்கிழமையன்று நகர்ப்பகுதியில் சுடலை என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அந்தப் பகுதியில் விபத்து ஏற்பட்டது போன்று இளைஞர்கள் கீழே கிடப்பதைக் கண்டு அருகில் சென்றிருக்கிறார். அப்போது கீழே கிடந்த இளைஞர்களும் பதுங்கியிருந்த இளைஞர்களும் ஒன்றிணைந்து சுடலையைத் தாக்கி இரு சக்கர வாகனத்தை திருட முயன்றுள்ளனர். ஆனால், சமயோஜிதமாக யோசித்த சுடலை, அவர்களிடமிருந்து தப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுடலை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையிடம் நடைபெற்ற நிகழ்வு குறித்து புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு கண்காணித்து வந்தனர். தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல் துறையினர், நூதனக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முத்து வேல்முருகன், ஹரிஹரன், மணிகண்டன், சங்கரநாராயணன், மாரிசக்தி ஆகிய ஐந்து இளைஞர்களையும் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் வாகனக் கொள்ளை அடித்துவிட்டு கக்கன் நகர் நகர்ப்பகுதியிலும் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. அதேபோன்று தாழையுத்து பகுதியிலும் இதேபோன்ற கொள்ளை முயற்சியில் சில நாள்களுக்கு முன்பு ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து ஐந்து பேரிடமும் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: மருமகனைக் கொலை செய்த மாமனார் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.