ETV Bharat / state

ஆவின் பால் பாக்கெட்டுகளை திருடி ஆவின் வண்டியிலேயே விற்ற நால்வர் கைது!

author img

By

Published : Mar 11, 2023, 1:17 PM IST

திருநெல்வேலியில் ஆவின் நிறுவனத்தில் பால் பாக்கெட்டுகளை திருடி, ஆவின் வண்டியிலேயே கொண்டு சென்று விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

ஆவின் பால் பாக்கெட்டுகளை திருடி, ஆவின் வண்டியிலேயே சென்று விற்பனை செய்த 4 பேர் கைது

திருநெல்வேலி: ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த பால் நிறுவனத்திலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தினந்தோறும் சுமார் 75 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாகப் பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்திலிருந்து தினசரி 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பால் பாக்கெட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, இந்த ஆவின் நிறுவனத்திலிருந்து பால் பாக்கெட்டுகள் திருடப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

தினமும் பால் பாக்கெட் எடுத்துச் செல்லும் வாகனங்களில் திருடப்பட்ட பால் பாக்கெட்டுகளையும் ரகசியமாக வைத்து விற்கப்படுவதாகப் புகார்கள் குவியத் தொடங்கின. இந்த நிலையில், நேற்றிரவு (மார்ச்.10) ஆவின் கூடுதல் துணை மேலாளர் ஜோஸ்பினா மற்றும் சாந்தி ஆகியோர் தெற்கு பஜார் பகுதிக்குப் பால் கொண்டு செல்லும் வாகனத்தைப் பாதியில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையின்போது, கணக்கில் வராத வழக்கத்தை விட 209 லிட்டர் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக, அந்த பால் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் இவை குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன், ஆவின் நிர்வாகத்திற்கு நேரில் சென்று இது தொடர்பாக இரண்டு பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

எத்தனை நாட்கள் இந்த மாதிரி பால் திருட்டு நடைபெற்றது என்பது குறித்தும், இதில் ஆவின் ஊழியர்கள் தொடர்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கி வரும் ஆவின் நிர்வாகத்தில் நேற்றிரவு மட்டும் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பால் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தினமும் எத்தனை வாகனங்களில் இது மாதிரியான பால் பாக்கெட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது..

இதனால், ஆவின் நிர்வாகத்திற்கு எத்தனை லட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவரும். இதற்கிடையே, இது தொடர்பாக பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லோடுமேன் மன்சூர், டெஸ்ட்பாட்ச் கிளார்க் ஆசை தம்பி, பால் முகவர் ரமேஷ், உதவியாளர் அருண் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, நாள்தோறும் ஆவின் நிறுவனத்தில் இருந்து பால் பாக்கெட்டுகளை திருடி, அதே ஆவின் வாகனத்தில் ஏற்றி கடைகளில் விற்பனை செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும், யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பன உள்ளிட்டவை குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆளுநர் பதவியை அம்பேத்கர் மறுக்க காரணம் - அமைச்சர் துரைமுருகன் சொல்வதென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.