ETV Bharat / state

14 வயதில் 100 உலக சாதனைகள்; பிரமிக்க வைத்த நெல்லை சிறுமியின் அசாத்திய திறமை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 9:06 PM IST

நெல்லையில் இளம் யோகா ஆசிரியர் பிரிஷா கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், வாமதேவ ஆசனத்தில் பொருள்களை அடையாளம் காணுதல் உள்பட ஒரே நாளில் 30 சாதனைகள் செய்துள்ளார். இத்துடன் இவர் மொத்தம் 100 உலக சாதனை படைத்துள்ளார்.

k prisha
இளம் யோகா ஆசிரியர் பிரிஷா

14 வயதில் 100 உலக சாதனை

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்- தேவிப் பிரியாவின் மகள் பிரிஷா (14). இவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். 2 வயதில் இருந்தே யோகாசனங்கள் கற்று இதுவரை 70 உலக சாதனைகளை படைத்துள்ளார்.

இளம் வயதில் அதிக உலக சாதனை : இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள் உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களைக் கட்டிக் கொண்டு தன்னுடைய அசாத்திய திறமையால் பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு யு.எஸ்.ஏ குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது. மேலும், இளம் வயதிலேயே மூன்று முனைவர் பட்டங்களையும் முதன் முறையாக பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’இளம் வயது யோகா ஆசிரியர்; என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கி கௌரவித்துள்ளது.

100 வது உலக சாதனை: இதுவரை 70 உலக சாதனைகள் செய்துள்ள பிரிஷா. தனது 100 வது சாதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இன்று தனது கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை செய்து தனது நூறாவது உலக சாதனையை நிறைவு செய்துள்ளார்.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் நடந்த நிகழ்வில் நோபல் வேல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு 20 நொடிகளில் கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருள்களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக்க வேகமாக செய்வது, மனித உடலில் கட்டப்பட்டுள்ள பலூன்களை உடைத்தல், 20 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தில் காட்டும் சைகைகளை அதிக எண்ணிக்கையில் அடையாளம் காட்டுதல்,

ஒரு கையால் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வுகளை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார். இவை அனைத்தையும் இவர் கண்களை கட்டிக்கொண்டு செய்ததால் இதனை உலக சாதனையை புத்தகத்தில் நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

பார்வையற்றவர்களுக்கு யோகாசனம்: இது குறித்து சாதனை மாணவி பிரிஷா கூறுகையில், “எனது பெற்றோரின் முயற்சியால் இரண்டு வயதில் இருந்து யோகாசனம் கற்று, பல்வேறு சாதனைகளை இதுவரை நிகழ்த்தியுள்ளேன். பார்வையற்றவர்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். அவர்களும் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதுவரை 70 சாதனைகள் செய்துள்ள நிலையில் 100 சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று இலக்குடன் இன்று ஒரே நாளில் 30 சாதனைகள் செய்து எனது நூறு சாதனைகள் இலக்கை பூர்த்தி செய்துள்ளேன்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நோபல் வோல்ட் ரிக்காட் சி.இ.ஒ அரவிந்த் கூறுகையில், “மாணவி பிரஷா இன்று (செப்.27) ஒரே நாளில் கண்களைக் கட்டிக்கொண்டு 30 சாதனைகளை செய்துள்ளார். இதுவரை இந்த சாதனைகளை யாரும் செய்யவில்லை” என கூறியுள்ளார். 100 உலக சாதனைகள் புரிந்த சாதனை மாணவி பிரிஷாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க: Asian Games : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி! இந்திய மகளிர் அணி அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.