ETV Bharat / state

"கெஞ்சிப் பார்த்தேன் கேட்கல அதான் கொன்னுட்டேன்.. என்னை தூக்துல போடுங்க" - நெல்லை இளம்பெண் கொலையில் கைதான சிறுவன் கதறல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 10:42 PM IST

Tirunelveli Women Murder Case: நெல்லையை உலுக்கிய இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன், "அவளை அடித்துப் பார்த்தேன், கெஞ்சிப் பார்த்தேன் கேட்கவில்லை இறுதியாக கொலை செய்து விட்டேன், என்னை தூக்கில் போடுங்கள்” என காவல் துறையினரிடம் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

நெல்லை சிறுவன் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ

திருநெல்வேலி: நெல்லை டவுனில் 18 வயது இளம்பெண் சந்தியா என்பவர் நேற்று முன்தினம் (அக்.02) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சந்தியாவை இச்சிறுவன் காதலித்து வந்ததாகவும், நாளடைவில் சந்தியா சிறுவனை வெறுத்த காரணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சந்தியாவை திட்டமிட்டு கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தியாவை கொலை செய்வதற்காக சிறுவன் ஆன்லைனில் கத்தியை ஆர்டர் செய்து வாங்கியதும் தெரியவந்தது. சந்தியாவை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியால் தனது கழுத்தையும் அந்த சிறுவன் அறுக்க முயற்சி செய்துள்ளான். பின்னர் தனது சொந்த ஊரான தோப்பூரில் காட்டுப்பகுதியில் நடமாடிக்கொண்டிருந்தபோது காவல் துறையினர் அவனை துரத்தி பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த சிறுவனின் உடலில் வேறு எங்கும் காயம் உள்ளதா என்பதை காவல் துறையினர் ஆய்வு செய்து, அந்த சிறுவனுடன் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். அந்த சிறுவனும் நடந்தவற்றை விளக்கினார். அப்போது அந்த சிறுவன் கூறுகையில், “பலமுறை அவளிடம் பேசி பார்த்து விட்டேன், அடித்தும் பார்த்து விட்டேன், கெஞ்சியும் பார்த்து விட்டேன், எந்த பலனும் இல்லை அதனால் தான் இறுதியாக கொலை செய்தேன். அவள் இல்லாத உலகத்தில் நான் வாழ மாட்டேன், தப்பு செய்துவிட்டு எப்படி என்னால் வாழ முடியும்? என்னை அடித்துக் கொல்லுங்கள் அல்லது தூக்கில் போடுங்கள்” என கூறினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த காவல் துறையினர், இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர், பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மூன்றாவது மகள் சந்தியா (18). இவர் நெல்லை டவுன் கீழ ரத வீதியில் இயங்கி வரும் பேன்சி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (அக்.2) கடைக்குத் தேவையான கூடுதல் பொருள்களை, அதே தெருவில் உள்ள குடோனில் இருந்து எடுக்கச் சென்றபோது அப்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சந்தியாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில் சந்தியா வேலை செய்த கடையின் அருகேவுள்ள கடையில் வேலை செய்த 17 வயது சிறுவன், சந்தியாவை காதலித்து வந்துள்ளார். இதனை சந்தியா கண்டித்து வந்துள்ளார், இருந்தபோதிலும் சிறுவன் விடாமல் தொந்தரசெய்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுவன் சந்தியாவை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு அந்த சிறுவனை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் இன்று காவல் துறையினரிடம் அவர் பிடிபட்டார்.

இதையும் படிங்க: காதலியின் கழுத்தை அறுக்க ஆன்லைனில் கத்தி ஆர்டர்.. நெல்லை இளம்பெண் கொலையில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.