ETV Bharat / state

மீண்டும் வெடித்த முல்லைப்பெரியாறு விவகாரம்: 5 மாவட்ட விவசாயிகள் கண்டனம்

author img

By

Published : Aug 26, 2020, 1:44 AM IST

farmers
farmers

தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாகக் குறைக்கக்கோரி, கேரள வழக்குரைஞர் தொடர்ந்த வழக்கில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தையும் தமிழ்நாடு அரசின் மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டுமென துணை முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். தேவர் கூறுகையில், "ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாகக் குறைக்க வேண்டுமென கேரள வழக்குரைஞர் ஜோய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்செய்யும் நேரத்தில், ஐந்து மாவட்ட விவசாயிகளையும் மனுதாரர்களாகக் சேர்க்க வேண்டும்.

பல்வேறு சட்டப் போராட்டம், பரிசோதனைகளுக்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தற்போது, இதுபோன்று வழக்கு தொடர்வது உள்நோக்கம் கொண்டது. கேரள அரசின் அனுமதியில்லாமல் இவ்வாறு செய்ய இயலாது. தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய முல்லைப்பெரியாறு அணையின் நீர் வழித்தடத்தில் கிட்டத்தட்ட 26 இடங்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அடைத்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த எவரும் வழக்குத் தொடராத வகையில் தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவைத் தாக்கல்செய்ய வேண்டும். முல்லைக் கொடி என்னும் இடத்திலிருந்து லோயர் கேம்ப் வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் 50 அடி உயரத்தில் புதிதாக சுரங்கப்பாதை அமைத்து தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீர் கொண்டுவருவதற்கான திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: விருதுநகரில் கி.பி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரை கோவில் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.