ETV Bharat / state

தேனியில் கையோடு வந்த தார் சாலை.. தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 11:53 AM IST

Updated : Nov 24, 2023, 12:06 PM IST

T.Subbulapuram, Theni road issue: தேனியில் தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
தேனியில் கையோடு வந்த தார் சாலை

தேனியில் கையோடு வந்த தார் சாலை

தேனி: 50 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு, புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, கையோடு பெயர்ந்து வந்ததால், தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, தரமான சாலை அமைக்க வேண்டும் என டி.சுப்புலாபுரம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. விசைத்தறி உற்பத்தி தொழிலை முதன்மைத் தொழிலாக செய்து வரும் இப்பகுதியில், சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். டி.சுப்புலாபுரம் ஊராட்சியைச் சுற்றி பொம்மி நாயக்கன்பட்டி, டி.புதூர், டி.ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது.

இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவத் தேவை மற்றும் கல்விக்கு, கரடு முரடான மலைச்சாலை வழியாக டி.சுப்புலாபுரம் கிராமத்திற்கு வரும் நிலை உள்ளது. மற்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆண்டிபட்டிக்குச் செல்ல வேண்டுமென்றால், டி.சுப்புலாபுரம் சாலையைப் பயன்படுத்திச் செல்ல வேண்டும். இல்லையென்றால், பத்து கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலையுள்ளது.

மேலும், பொம்மி நாயக்கன்பட்டியில் விளைவிக்கப்படும் காய்கறிகள், அருகில் உள்ள டி.சுப்புலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முறையான சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தரமான சாலை அமைக்க வேண்டும் என கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து, பொம்மி நாயக்கன்பட்டி - டி.சுப்புலாபுரம் கிராம இணைப்பு சாலையாக, சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள கரடு முரடான மலைச்சாலையில், தார்சாலை அமைக்கும் பணிக்காக ரூ.2 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால், அப்பகுதி மக்கள் தங்களது 50 ஆண்டு கனவு நிறைவேறி விட்டதாக மகிழ்ச்சியோடு இருந்தனர்.

இந்நிலையில், ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலை, கையோடு பெயர்ந்து வந்ததால், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சாலையின் நடுவே போடப்பட்ட குடிநீர் ஆழ்துளைகளை முறையாக மூடாமல், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக இருக்கின்றது. முறையற்ற சாலை பணி குறித்து, சாலை அமைத்த தனியார் ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் தங்களை மிரட்டுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

50 ஆண்டுகள் காத்திருந்து, புதிய சாலை அமைக்கப்பட்ட மகிழ்ச்சியில் இருந்த தங்களுக்கு, தற்போது தரமற்ற சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் கூடுதலாக ஏற்பட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீண்டும் தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: “மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ.8 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை” - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்!

Last Updated :Nov 24, 2023, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.