ETV Bharat / state

காதலுக்காக சிறை செல்லும் பழங்குடிகள் - கலாசாரத்தை அழிக்கிறதா போக்சோ?

author img

By

Published : Nov 14, 2022, 7:06 PM IST

Updated : Nov 14, 2022, 8:57 PM IST

நாகரிக உலகின் எந்த வசதிகளும் எட்டாத தூரத்தில் வாழும் நீலகிரி மாவட்ட பழங்குடி மக்கள், போக்சோ சட்டத்தின் இயந்திரத்தனமான அமல்படுத்தலால், எண்ணற்ற இன்னல்களை அடைவதாக கூறுகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

நீலகிரி: "போக்சோ சட்டத்தின் நோக்கம் என்பது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதிலிருந்து தடுப்பதாக இருக்க வேண்டும். மாறாக இளம் காதலர்களிடையே மனமொத்து நிகழும் காதல் உறவை கிரிமினல் குற்றமாக மாற்றும் நோக்குடன் இருக்கக் கூடாது". இது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங், போக்சோ வழக்கு ஒன்றில் தெரிவித்த கருத்து.

நீலகிரி மாவட்டத்தின் பழங்குடிகள் கிட்டத்தட்ட இதே நிலையை தான் எதிர்கொள்கின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பசுமைக்குள் , தங்கள் பழக்க வழக்கங்களையும் பழமை மாறாமல் பதுக்கி வாழ்கிறது தோடர் சமூகம். ஆன்லைன் மேட்ரிமோனி, இன்ஸ்டாகிராம் காதல், டிண்டரில் டேட்டிங் என வாழும் நவநாகரிக உலகின் எந்த தடயமும் இல்லாமல் இங்கு நடைபெறும் திருமணங்கள் வெளியுலகிற்கு வினோதமாக இருக்கலாம்.

பழங்குடி மக்களில் ஒருவராகிய ராஜன் தங்கள் சமூகத்தின் திருமணம் குறித்து விவரிக்கிறார். தோடர்களின் திருமணம் நகரங்களில் நடப்பதைப் போன்று மண்டபங்களிலோ கோயில்களிலோ நடப்பதில்லை. இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த துணையை தேர்வு செய்வது சுதந்திரமாக அனுமதிக்கப்படுகிறது. இருதரப்பும் இணைந்து நிச்சயம் செய்கின்றனர்.

பின்னர் காதலர்களாக இணைந்து வாழும் அந்த ஜோடி கர்ப்பம் தரித்த பின்னர் தான், தங்களின் கலாசாரப்படி வில், அம்புகளை வைத்து சடங்கு செய்கின்றனர். இதன் பின்னர்தான் சமுதாய பெரியவர்களை வரவழைத்து திருமணம் செய்து வைக்கின்றனர். சில தசாப்தங்களுக்கு முன்பு வரை கூட பத்து, பன்னிரண்டு வயதுகளில் திருமணம் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது இந்த சமூகத்தில்.

தற்போது சட்டதிட்டங்கள் குறித்த விழிப்புணர்வுகளால் 18 வயதை நெருங்கியதும் திருமணம் செய்து கொடுக்கின்றனர். பன்னெடுங்காலமாக பழங்குடி வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் சமகால உலகுடன் இணைந்து வாழ முற்படும் நேரத்தில், சட்டத்தின் கரங்கள் அனுசரணையாக இருப்பதற்கு பதிலாக ஆதிக்கம் செலுத்துவதாக கவலை தெரிவிக்கின்றனர் பழங்குடி மக்கள்.

காதல் திருமணம் செய்தவர்களில் நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் 27 பேர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. 2018ம் ஆண்டுக்கு முன்பு கைதானவர்களில் 5 பேர் மட்டுமே விடுதலை ஆகியுள்ளனர் மற்றவர்களின் சட்டப்போராட்டம் இன்னமும் ஒய்ந்தபாடாக இல்லை. வாரம்தோறும் பழங்குடி இளைஞர்கள் போக்சோ சட்டத்திலும், குழந்தைகள் திருமண சட்டத்திலும் கைதாவது தொடர்கதையாக உள்ளது என்கிறார் வழக்கறிஞர் மலைச்சாமி. கடந்த 11 ஆண்டுகளில் கைதான பழங்குடி இளைஞர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டும் என்கிறார் மலைச்சாமி.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வகையான பழங்குடிகளில் பெரும்பாலானோர் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கின்றனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தைத் திருமணத்தை மறைத்தாலும், இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, மகப்பேறுக்காக மருத்துவமனைக்கு செல்லும் போது விஷயம் வெளியே தெரியவருகிறது. மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் தகவல் மூலம் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காதலுக்காக சிறை செல்லும் பழங்குடிகள்

பழங்கு மக்களின் நலனுக்காக இலவசபட்டா, மருத்துவம், கல்வி உதவி என பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படாவிட்டாலும் கூட, தண்டனைக்கு உள்ளாக்கும் சட்டப்பிரிவுகள் மூலம் அவர்களை வேட்டையாடுவது ஆரோக்கியமானதல்ல என பழங்குடியின செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர் பிரீத்தி, பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களை போலீஸ் நடவடிக்கைகளின் மூலம் மாற்றிவிட முடியாது என்பதோடு, முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆக்கபூர்வமான தீர்வாக அமையும் என்கிறார். ஆனால் உண்மையில், போக்சோ சட்டம் குறித்தும், குழந்தை திருமண தடை சட்டம் குறித்தும் போதுமான விழிப்புணர்வு பழங்குடியினரிடம் இல்லை என்பதையும் உணர முடிகிறது.

போக்சோ வழக்குகளின் நடைமுறை அறியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் பழங்குடி பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் தயங்குகின்றனர் என்கிறார் வழக்கறிஞர் மலைச்சாமி. பள்ளியில் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் பழங்குடி மக்கள்.

போக்சோ சட்டத்தில் கைதான பழங்குடி இளைஞரை சட்டப்போராட்டம் நடத்தி மீட்டவரான வழக்கறிஞர் விஜயனிடம் இது குறித்து பேசுகையில்,
"குழந்தைகளை காக்கிற போக்சோ சட்டம் குறித்து உலகளாவிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 18 வயது அடையப்போகின்ற ஒரு இளம் பெண், குழந்தைபேருக்காக மருத்துவமனைக்கு செல்கிறார் அங்கு ஆதார் அட்டை பரிசோதனை செய்ததில் வயது குறைவாக வருகிறது.

இதனை அடுத்து அந்த பெண்ணின் கணவர் தாய் தந்தை மாமனார் மாமியார் மீது போக்சோ வழக்கும், குழந்தை திருமண தடுப்புச் சட்டமும் பாய்கிறது. இதில் மூன்று பேர் கைதுக்கு பயந்து தலைமறைவாகின்றனர். கணவர் சிறையில் அடைக்கப்படுகிறார். பச்சிளம் குழந்தையை வைத்துக் கொண்டு அந்த இளம் தாய் தன்னுடைய கணவனும் இல்லாமல் தாய் தந்தையரும் இல்லாமல் எவ்வளவு பெரிய சிரமத்தை சந்தித்து இருப்பார் என உற்று நோக்க வேண்டும் என்கிறார்.

இதை ஒரு வழக்காக எடுத்து இந்த போக்சோ வழக்கின் எந்திரத்தனமான தலையீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அணுகினோம். உயர்நீதிமன்றம் வந்த இளம் தாய் கொடுத்த சான்றுருதியின் அடிப்படையில் இந்த வழக்கினுடைய உண்மைத்தன்மை புரிந்து கொண்டு அந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீதான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என தனது சட்டப்போராட்டத்தை நினைவு கூர்கிறார்.

மலைக்காட்டிலிருந்து தரைத்தளத்திற்கே இறங்கி அறியாத பழங்குடி மக்களுக்கு உயர்நீதிமன்றம் சென்று வழக்கை வெல்வது சாத்தியமில்லாத ஒன்று. போக்சோ சட்டம் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சரியான ஆயுதம் என்றாலும், பழங்குடி மக்களின் நிலையை உணர்த்து அரசு எந்திரம் தனது இரும்புக்கரத்தை தளர்த்துவதோடு வேண்டும் என்பதே பழங்குடி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. ஈடிவி பாரத் செய்திகளுக்காக கோவை செய்தியாளர் ஸ்ரீனிவாசனுடன் சங்கரநாராயணன்.

Last Updated : Nov 14, 2022, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.