ETV Bharat / state

26 நாட்களாக தொடரும் நீலகிரி பூங்கா ஊழியர்கள் போராட்டம் - ஒருவர் பலி!

author img

By

Published : Apr 17, 2023, 8:01 PM IST

நீலகிரி மாவட்டம், தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கேட்டு கடந்த 26 நாட்களாக உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த வாரம் மயக்கமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அங்கம்மா (58) இன்று கோவை மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Ooty garden news
Ooty garden news

நீலகிரி மாவட்டம், தோட்டக்கலை மற்றும் பூங்கா ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 26 நாட்களாக மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் காரணமாக மலர்க்கண்காட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்கா மற்றும் தோட்டக்கலைப் பண்ணை ஊழியர்கள் காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26 நாட்களாக உதகை தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வீசிச் செல்லும் குப்பைகளை அள்ளுவது, மலர் நாற்றுகள் நடுவது, புல்லை டிரிம் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் இந்த 500-க்கும் மேற்பட்ட தோட்டக்கலைப் பணியாளர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். தோட்டக்கலை ஊழியர்களுடன் மாவட்ட ஆட்சியர் அம்ரித் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.

மண்ணின் மைந்தனும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடத்திய பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. நிரந்தர ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் என 1400 பேரில் ஐநூறுக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் 26 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்தவாரம் போராட்டத்தில் ஈடுபட்டு மயக்கமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அங்கம்மா(58) என்பவர் இன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்த தோட்டக்கலைப் பண்ணை ஊழியர்கள் முடிவெடுத்துள்ளனர். தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அடிக் அகமது கொலை வழக்கு - துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் குடும்பம் தலைமறைவு!



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.