ETV Bharat / state

"அறியாமையில் பேசும் அண்ணாமலை" - டிடிவி தினகரன் கிண்டல்

author img

By

Published : Jun 14, 2023, 12:11 PM IST

தமிழ்நாட்டில் 30 ஆண்டுகாலம் ஆளுமையாக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால் அவரை பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசி வருகிறார் என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.

TTV DINAKARAN BYTE
டிடிவி தினகரன்

ஜெயலலிதாவைப் பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசுகிறார் என டிடிவி தினகரன் கண்டனம்

தஞ்சாவூர்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு புதிது என்பதை திரும்ப திரும்ப நிரூபித்து வருகிறார். தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு, ஜெயலலிதா என்கிற மாபெரும் ஆளுமை பற்றி அறியாமல் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.

இந்திய அளவில் நடந்த சதியினால் தான் ஜெயலலிதா வழக்கில் தண்டிக்கப்பட்டார்கள். 1996-ல் ஜெயலலிதா தோல்வியுற்ற பிறகு 1998 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வாய்ப்பு கொடுத்தது ஜெயலலிதா தான். பிரதமர் மோடி வாஜ்பாய் அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அன்புடனும் நட்புடனும் இருந்தவர்கள்.

உலகம் போற்றும் அன்னை தெரசா போன்ற சமூக சேவகர்கள் கூட ஜெயலலிதாவின் திட்டங்களை பாராட்டினர், குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டத்திற்காக அவரை பாராட்டியும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும், விவசாயிகளுக்காகவும், 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை பின்தங்கிய மக்களுக்காக பெற்றுத்தந்த சமூக நீதி காத்த வீராங்கனை என்று பல பட்டங்களுக்கு உரிமையானவர்.

இதெல்லாம் தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். ஜெயலலிதா அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏராளமான சாதனைகள் செய்துள்ளார். அந்த சாதனைகளை பொறுக்க முடியாமல் தான் சிலர் காழ்புணர்ச்சியில் அவர் மீது வழக்கு தொடுத்தனர். அவரது மரணம் வரை அவரை யாராலும் வெல்ல முடியவில்லை. சுமார் 30 ஆண்டுகாலம் தமிழகத்தின் ஆளுமையாக இருந்தார்.

ஆனாலும் அவரைப்பற்றி அறியாமையில் பேசி வருகிறார். இபிஎஸ்-யிடம் இப்போது ஜெயலலிதா என்றாலே யார் என்று கேட்பார். ஜெயலலிதாவை விட சீனியர் நான்தான் என்றும், அவரை வளர்த்து விட்டது நான் தான் என்றும் கூட அவர் கூறுவார் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சராக பணியாற்றும் செந்தில் பாலாஜி எனது பழைய நண்பன் தான், அவர் மீது 2 ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வரும், அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணையும் அவர் மீது உள்ளது. ஒருவேளை அதனுடைய அடுத்த கட்டமாக அவர் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும் மருத்துவம் பொது கலந்தாய்வு முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக் கூட்டத்தில் சசிகலா படம் இல்லாதது குறித்த கேள்விக்கு அப்படியா, பார்க்கிறேன்" என்று கூறினார். மேலும் இந்த பேட்டியின் போது அமமுக துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ED Arrest: செந்தில் பாலாஜி கைது - அமைச்சர்கள் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.