ETV Bharat / state

கணைய புற்றுநோய்; நுண் துளை தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை… அசத்தும் அரசு தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 3:09 PM IST

Thanjavur Medical College Doctors: தஞ்சாவூரில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நுண் துளை தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை செய்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை
தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை

தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த 55 வயது பெண் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 14ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி அப்பெண்ணுக்கு நுண் துளை (லேப்ராஸ்கோப்பி) மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் சிகிச்சை குறித்துக் கூறும் போது, "தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுண் துளை மூலம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை இதுவே முதன்முறையாகும். இரைப்பை, குடல், ஈரல் கணையம் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

அதற்குத் தகுந்த மிகவும் சிக்கலான உயரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. ஆண்களில் ஒரு லட்சம் பேரில் 14 பேருக்கும், பெண்களில் ஒரு லட்சம் பேரில் 10 பேருக்கும் கணைய புற்றுநோய் ஏற்படுகிறது. கணைய புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை தான் முதன்மையான தீர்வை கொடுக்கிறது. ஆனால், இந்த அறுவை சிகிச்சையானது மிகவும் சிக்கலான, சவாலான காரியமாக உள்ளது.

மஞ்சள் காமாலையோடு வரும் நோயாளிகள் அறுவை சிகிச்சையின் போது அதிக ரத்த இழப்பு, ரத்த நாளங்களில் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய காயம், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படக்கூடிய மற்ற உடல் ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். இந்நிலையில், தற்போது முதன்முறையாக மிகவும் உயரிய மேம்படுத்தப்பட்ட சிகிச்சையான நுண் துளை அறுவை சிகிச்சை மூலம் மன்னார்குடியை சேர்ந்த பெண்ணுக்குச் சிகிச்சை அளித்துள்ளோம்.

இந்த சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் செய்ய வேண்டும் என்றால் ரூபாய் 4 முதல் 5 லட்சம் வரை செலவாகும், ஆனால், அரசு மருத்துவமனையில் எந்தவித கட்டணமும் இன்றி தமிழக அரசால் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த பெண்ணுக்கு டாக்டர்கள் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான அறுவை சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய அறுவை அரங்கும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மருத்துவ நிபுணர்கள், செவிலியர்களால் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தக்கூடிய ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) நம்பரைப் பெற்று மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளலாம்" என தெரிவித்தார்.

இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட குடல் அறுவைத் துறைத் தலைவர் அரவிந்தன், இணைப் பேராசிரியர் திருவருள், துணைப் பேராசிரியர்கள் செந்தில்குமரன், மேத்யூஸ், மயக்கவேல் துறை தலைவர் சாந்தி, டாக்டர் ஐஸ்வர்யா ஆகியோர் கொண்ட குழுவினரை முதல்வர் பாலாஜிநாதன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜன.4 முதல் நெல்லையில் ரத்தான அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஆரம்பம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.