ETV Bharat / state

போலி ஆவணங்கள் மூலம் மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

author img

By

Published : Mar 7, 2020, 10:03 AM IST

தஞ்சை: மயிலாடுதுறை அருகே அரசு முத்திரையிட்ட போலி ஆவணங்கள் மூலம் மணல் கடத்திவந்த 4 லாரிகள் பறிமுதல்செய்யப்பட்டன.

போலி ஆவணம்
போலி ஆவணம்

தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லூரில் திடல் மணல்குவாரி, அரசின் அனுமதி பெறாமல் இயங்கிவருகிறது. இங்கிருந்து தினமும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு லாரிகளில் மணல் ஏற்றிச் சென்று விற்பனை செய்கின்றனர்.

இவ்வாறு மணல் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அரசு முத்திரையிட்ட போலியான ரசீதைப் பயன்படுத்தி மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், நாகை மாவட்ட கனிமவளத் துறை அலுவலர் பிரியா இரவு மணல்மேடு கடைவீதியில் மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளில் சோதனைமேற்கொண்டார்.

போலி ஆவணங்கள் மூலம் மணல் கடத்திவந்த 4 லாரிகள்

அப்போது, ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்துவந்த நான்கு லாரிகளைச் சோதனையிட்டதில், போலியான ரசீதைப் பயன்படுத்தி மணல் கடத்தியது தெரியவந்தது. இவர்களிடம் விசாரணை செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்து நின்ற ஒரு காரில் 4 லாரி ஓட்டுநர்களும் ஏறி தப்பிச்சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கனிமவளத் துறை அலுவலர் பிரியா பிடிபட்ட நான்கு லாரிகள் குறித்து மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், சேகரித்த விவரங்களின் அடிப்படையில், மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி மணல் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட கடல் சிப்பிகளைக் கடத்தியதாக இருவர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.