ETV Bharat / state

காவிரி நீர் கிடைக்காததால் காயும் குறுவை நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை!

author img

By

Published : Jul 25, 2023, 4:53 PM IST

Updated : Jul 25, 2023, 6:22 PM IST

தஞ்சை மாவட்டத்தில் காவிரியிலிருந்து குறுவை பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால், நெற்பயிர்கள் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி பொய்த்துப் போகும் நிலை உள்ளதால், அரசு உரிய இழப்பீடு மற்றும் பயிர்க்காப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

AGRI CROP DAMAGE
தஞ்சை

காவிரி நீர் கிடைக்காததால் காயும் குறுவை நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை!

தஞ்சாவூர்: தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார். பின்னர், அந்தத் தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது. அதன் பிறகு, ஜூன் 16ஆம் தேதி கல்லணையில் இருந்து தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு, குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து தஞ்சை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், கர்நாடக அரசு காவிரி ஆற்றிலிருந்து போதிய அளவு தண்ணீரை திறக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் ஜூலை இரண்டாம் வாரம் வரையிலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவான அளவிலேயே காவிரியில் தண்ணீர் வந்தது. இதனால், மேட்டூர் அணைக்கு போதிய நீர் வரத்து இல்லை. தென்மேற்குப் பருவமழையும் குறைவாக உள்ள நிலையில், மேட்டூர் அணையிலும் போதிய அளவுக்கு நீர் இருப்பு இல்லாததால், தஞ்சை மாவட்டத்தில் குறுவை பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், நெற்பயிர்கள் வறட்சியில் காயும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவையாறு அருகே மேல திருப்பந்துருத்தியில், 100க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நடவு செய்து 30 நாட்களே ஆன நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இன்றி காய்ந்துபோயுள்ளன. விளைநிலங்கள் தண்ணீர் இன்றி வெடித்துள்ளற. இதனால், ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதேபோல், கடைமடை பகுதிகளான பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளிலும் பாசனத்திற்கு தண்ணீர் வராததால், குறுவை சாகுபடி பொய்த்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "குடமுருட்டி ஆற்றிலிருந்து இந்த விளைநிலம் அரை கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. எங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் முறையாக கிடைக்காததால், தற்போது நடவு செய்து 30 நாட்கள் ஆன நெற்பயிர்கள் அனைத்தும் காய்ந்துவிட்டன. விளைநிலங்கள் அனைத்தும் வெடித்துள்ளது. நகைகளை அடகு வைத்து, ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். ஆகையால் இப்பகுதியில் வேளாண்மை துறை அலுவலர்கள் கணக்கீடு செய்து, எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.

காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டு குறுவை காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட புதிய திட்டம் அறிவிப்பு!

Last Updated : Jul 25, 2023, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.