ETV Bharat / state

"காவிரி பிரச்சினை தீர நதிநீர் இணைப்புதான் வழி" - பிரேமலதா விஜயகாந்த்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 5:52 PM IST

Premalatha Vijayakanth: தஞ்சாவூரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரமலதா விஜயகாந்த், காவிரி பிரச்சினை தீர வேண்டும் என்றால் நதிநீர் இணைப்பு ஒன்றே தீர்வாகும் எனத் தெரிவித்தார்.

Rivers Inter link is the solution to the Cauvery issue DMDK Treasurer Premalatha Vijayakanth said
பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தஞ்சாவூர்: தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும், காவிரி நதி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டிக்கும் விதமாகவும், இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கும் விதமாகவும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று கண்டன உரை ஆற்றினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காவிரி பிரச்சினையை அரசியலாக்கி கொண்டிருக்கிறார்களே தவிர, இதற்கான நிரந்தரத் தீர்வை யாரும் எடுக்கவில்லை. இங்கு ஆட்சிகள்தான் மாறிக் கொண்டிருக்கிறது, காட்சிகள் மாறவில்லை.

மேலும், டெல்டா பகுதி முழுவதும் பாலைவனமாக மாறி இருக்கிறது என்றால், தமிழர்களாகிய நாம் அனைவரும் தலை குனிந்து வெட்கப்பட வேண்டிய நிலை இது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், பிரதமரும் இதில் தலையிட்டு இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். தமிழ்நாட்டில் ஆறுகள் தூர்வாரப்படுவதில்லை. மணல் கொள்ளை, கனிம வளக் கொள்ளை, தடுப்பணை கட்டி நீரை சேமித்து வைக்காததால் நிலத்தடி நீர்மட்டம் இல்லாத நிலையை எட்டியுள்ளது.

தடுப்பணைகள் அமைத்து நீரை சேமித்து விவசாயத்திற்கு யாரிடமும் கையேந்தாமல் தமிழ்நாடு தன்னிறைவு பெற வேண்டும். மேலும் கச்சத்தீவு, குடகு ஆகியவற்றை விட்டுக் கொடுத்து, தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்ததுபோல் சுயநல அரசியல் செய்யும் அரசியல்வாதிகளால்தான் தமிழ்நாடு பாலைவனமாக மாறி இருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைத்து கட்சித் தலைவர்களை அழைத்துச் சென்று தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத் தர வேண்டும்” என்றார். அதிமுக, பாஜக கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை. அதுபோல இரண்டு கட்சிகளுக்குள் பிரச்சினை இல்லை. இரண்டு தலைவர்களுக்குத்தான் பிரச்சினை. இது நிரந்தரமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த தேர்தலுக்கான அரசியலைத்தான் கட்சிகள் செய்கின்றன. ஆனால் அடுத்த தலைமுறைக்கான அரசியலை யாரும் செய்வதில்லை. தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத் தொகை வெறும் கண் துடைப்பு. முதலமைச்சர் ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடக அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டியது அவரது கடமை.

காவிரி பிரச்சினை நிரந்தரமாகத் தீர வேண்டும் என்றால், நதிநீர் இணைப்பு ஒன்றே தீர்வாகும். அதற்கான முயற்சியை பிரதமர் எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, திரைப்பட நடிகர் ராஜேந்திரன், தஞ்சை மாவட்டச் செயலாளர் ராமநாதன் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 750 லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதி - குமரி ஆட்சியர் உத்தரவுக்கு எதிரான வழக்கில் திருப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.