ETV Bharat / state

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் போட்ட விவசாயிகளுக்கு உரிய பணம் கிடைக்காமல் அவதி

author img

By

Published : Aug 17, 2022, 6:30 PM IST

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போடப்பட்ட நெல்லிற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்காததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் போட்ட விவசாயிகள் அனைவரும் பணப்பிரச்சனையில் கடும் அவதி!
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் போட்ட விவசாயிகள் அனைவரும் பணப்பிரச்சனையில் கடும் அவதி!

தஞ்சாவூர்: நடப்பாண்டில், முன்பட்ட குறுவை சாகுபடியை மோட்டார் பம்பு செட், டீசல் இன்ஜின் வைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள் கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கினர். தற்போது இதற்கான அறுவடைப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

சரியான எடை, நியாயமான விலையுடன், மூன்று தினங்களில் வங்கிக்கணக்கில் உரிய பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 நாட்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை எனக்காத்திருந்து நெல் போடுகிறார்கள்.

ஆனால், இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த ஜூலை 30ஆம் தேதிக்குப் பிறகு நெல் போட்ட விவசாயிகள் யாருக்கும் இதுவரை வங்கி மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால், விவசாயிகள் உரிய நேரத்தில் தாங்கள் பெற்ற கடனை வட்டியுடன் திரும்ப செலுத்த முடியாமலும், பள்ளி, கல்லூரி தொடங்கப்பட்டு விட்டதால், தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி கட்டணங்களைக் கட்ட முடியாமலும், வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெற்றவர்கள் அதனை உரிய காலத்தில் திரும்பப்பெற முடியாமலும் கடும் அவதியுற்றுள்ளனர்.

’வழக்கமாக 3 தினங்களில் சம்மந்தப்பட்ட விவசாயியின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். ஆனால், தற்போது 2 வாரங்களைக் கடந்த பின்னரும், பணம் கைக்கு கிடைக்கவில்லை. ஏற்கெனவே நெல் போட பத்து நாட்கள் வரை காத்திருந்தோம், தற்போது போட்ட நெல்லிற்காண பணம் பெறுவதற்கும் இரு வாரங்களைக் கடந்தும் காத்து நிற்கின்றோம்’ என விவசாயிகள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.

தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் போட்ட விவசாயிகள் அனைவரும் பணப்பிரச்னையில், சிக்கி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி விவசாயிகளுக்குரிய தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் போட்ட விவசாயிகளுக்கு உரிய பணம் கிடைக்காமல் அவதி

இதையும் படிங்க:ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.