ETV Bharat / state

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த ஊராட்சி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை... அதிமுகவினர் வெற்றி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 11:04 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெவ்வேறு தொகுதிகளில் நடைபெற்ற ஊராட்சி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுகவினர் வெற்றி பெற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெவ்வேறு தொகுதிகளில் நடந்த ஊராட்சி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுகவினர் வெற்றி
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெவ்வேறு தொகுதிகளில் நடந்த ஊராட்சி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுகவினர் வெற்றி

தஞ்சாவூர்: கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற கும்பகோணம் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில், மானம்பாடி, சேங்கனூர், மகாராஜபுரம் ஊராட்சிகளை உள்ளடக்கிய 1வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கண்ணகி கண்ணன் 1,865 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் இவருடன் மொத்தம் ஐந்து நபர்கள் போட்டியிட்டனர். இதில் செல்லாத வாக்குகள் மட்டும் 278 ஆகும். இவருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்ட மகாராணி என்பவர் 1,817 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இவர் தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றத்தில், கண்ணகி கண்ணன் 48 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து, இன்று(நவ. 25) மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இந்நிலையில், அதிமுக சார்பில் சம்மந்தப்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணகி கண்ணன் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுவாக்கு எண்ணும் இடத்தில் அவர் சார்பாக, வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

உடல்நலக்குறைவோடு அவர் வாக்கு எண்ணும் இடத்தில் நின்று கொண்டிருந்த நிலையில் ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணகி கண்ணன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனைதொடர்ந்து அவர் உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தற்போது முதலுதவி சிகிக்சைக்கு பிறகு, தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வாக்கு எண்ணிக்கை ஒரு மணிநேரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ஏற்கனவே வெற்றி பெற்ற அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணகி கண்ணன் 1,848 வாக்குகள் பெற்றிருந்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மகாராணி 1,807 வாக்குகள் பெற்றிருந்தார். எனவே 41 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணகி கண்ணன் வெற்றி மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இது நீதிமன்றத்தில் நாளை அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 526 வாக்குகள் பெற்று சுமதி சரவணன் (அதிமுக) வெற்றி பெற்றார். அவரிடம் 492 வாக்குகள் மட்டும் பெற்று திமுகவை சேர்ந்த காமாட்சி என்பவர் தோல்வியடைந்தார்.

இதனையடுத்து தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றத்தில் திமுகவை சேர்ந்த காமாட்சி தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், அதிமுகவை சேர்ந்த சுமதி சரவணன் பெற்ற வெற்றி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: "தஞ்சையில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து.. முதற்கட்ட பணிகள் தீவிரம்" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.