ETV Bharat / state

உறவினருடன் செல்ல இளம்பெண் கிருத்திகா விருப்பம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி

author img

By

Published : Feb 16, 2023, 8:00 PM IST

தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம்பெண் கிருத்திகா, கேரளாவில் உள்ள உறவினருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால், அதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்தது.

குருத்திகா விருப்பம்
குருத்திகா விருப்பம்

மதுரை: தென்காசி மாவட்டம் கொட்டாக்குளத்தை சேர்ந்த மாரியப்பன் வினீத், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "இலஞ்சியை சேர்ந்த கிருத்திகா பட்டேலை காதலித்து வந்தேன். கடந்த ஜனவரி 20-ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்தபோது, கடந்த 25ம் தேதி என்னை தாக்கிவிட்டு, கிருத்திகாவை அவரது பெற்றோர் கடத்தி சென்றுவிட்டனர். என் மனைவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே கிருத்திகாவை தன்வசம் ஒப்படைக்குமாறு அவரது தாத்தா தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் முந்தைய விசாரணையின்போது அரசு தரப்பில், "வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. கிருத்திகா பட்டேலை அனுப்பினால் விசாரணை பாதிக்கும். அவரை தாத்தாவுடன் அனுப்பி வைக்கக் கூடாது" என வாதாடப்பட்டது. இதையேற்ற நீதிமன்றம் கிருத்திகாவை அவரது தாத்தாவுடன் அனுப்ப மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், மாரியப்பன் வினீத்தின் மனு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (பிப்.16) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகளின் உத்தரவின் அடிப்படையில், இளம்பெண் கிருத்திகாவை போலீசார் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் நீதிபதிகள் வாக்குமூலம் பெற்றனர்.

பின்னர், கேரளாவில் உள்ள தனது உறவினர் ஹரிஷூடன் செல்வதாக கிருத்திகா கடிதம் மூலம் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள், "கிருத்திகா மேஜர் என்பதால் அவர் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அவர் விருப்பம் போல் கேரளாவைச் சேர்ந்த உறவினருடன் செல்லலாம். ஆனால், விசாரணைக்கு முறையாக ஆஜராகி ஒத்துழைப்புத் தர வேண்டும். கிருத்திகா யாருடன் செல்கிறாரோ, பாதுகாப்புக்கு அவரே பொறுப்பு. மாரியப்பன் வினீத் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி, நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்" என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை நோயாளி நுகர்வோரே அல்ல: நுகர்வோர் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.