ETV Bharat / state

தென்காசியில் ஊழியரிடம் லஞ்சம் கேட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் கைது!

author img

By

Published : May 17, 2023, 10:39 AM IST

தென்காசி மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தில், ஊழியரிடம் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Tenkasi vigilance team arrests twad officer for accepting bribe from employee
தென்காசியில் ஊழியரிடம் லஞ்சம் கேட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் கைது

தென்காசி: குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருபவர், ராமசுப்பிரமணியன். இவர் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்த பணியாளராக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி வந்து உள்ளார்.

அவர், தற்போது பணி நிரந்தரம் பெற்று குற்றாலம் குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியபோது இவருக்கு அரியர் தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை பெறுவதற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கண்காணிப்பாளர் சீனிவாசனை தொடர்பு கொண்டார். அரியர் தொகையான ரூ.3 லட்சத்து, 93 ஆயிரத்து 700 ரூபாயை வழங்குவதற்காக, குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கண்காணிப்பாளர் சீனிவாசன் (வயது 50), ராமசுப்பிரமணியத்திடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார்.

அதற்கு, ராமசுப்பிரமணியன் தன்னிடம் பணம் இல்லை எனவும், தன்னுடைய குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். ஆகையால் தனக்கு சேரவேண்டிய தொகையை மீட்டுத் தந்தால் பெரும் உதவியாக இருக்கும் என ஸ்ரீனிவாசனிடம் பலமுறை கேட்டு உள்ளார். இதற்கு சீனிவாசன், ’பணம் கொடுத்தால் மட்டுமே உன் அரியர் தொகை உனக்கு கிடைக்கும்’ என அதிகாரமாக பல நாட்களாக கூறி வந்து உள்ளார்.

’என்ன செய்வது என்று தெரியாது தவித்து வந்த ராமசுப்பிரமணியன்’, தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ராமசுப்பிரமணியன், கண்காணிப்பாளர் சீனிவாசனை சந்தித்து, அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை, சீனிவாசனிடம் கொடுத்து உள்ளார்.

அவர் அந்த ரசாயனம் தடவப்பட்ட பணத்தை வாங்கிய நிலையில், அப்பொழுது, அங்கு மறைந்திருந்த தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான 6 பேர் கொண்ட போலீசார், ரசாயனம் தடவிய நோட்டுகள் உடன் இருந்த ஸ்ரீநிவாசனை கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு, அவருக்கு சொந்தமான பணத்தை கொடுப்பதற்காக உயர் அதிகாரி லஞ்சம் கேட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதே போன்று பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடுவதாக கூறப்படுகிறது. இச்சூழலில், இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: 'பாண்டியநாடு' பட பாணியில் நடந்த கொலை - மகனின் கொலைக்கு பழி தீர்த்த தந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.