ETV Bharat / state

"அரைகுறை பணிக்கு ரூபாய் ஒரு கோடியா?" - தென்காசி ஆய்வில் உறுதிமொழி குழு பகீர் கேள்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 8:22 AM IST

TN Assurance Committee: தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவினர், புதுப்பித்தல் பணிகள் அரைகுறையாக இருந்ததைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

அரைகுறை பணிக்கு ரூபாய் ஒரு கோடியா? - உறுதிமொழி குழு சரமாறி கேள்வி
அரைகுறை பணிக்கு ரூபாய் ஒரு கோடியா? - உறுதிமொழி குழு சரமாறி கேள்வி

தென்காசி: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. அந்த வகையில் உறுதிமொழி குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில், உறுதிமொழி குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்கள் அண்ணாதுரை, அருள் மற்றும் மோகன் உள்ளிட்டவர்கள் குற்றாலம் கலைவாணர் அரங்கம், சுற்றுலா தளமான மெயின் அருவி, திரு.வி.க இல்லம் உள்ளிட்டவைகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், பாராமரிப்பு குறித்து உறுதிமொழி குழு பல்வேறு குறைகளை மேற்கோள்காட்டியது. இதில் குறிப்பாக, புதுப்பித்தல் பணிகளுக்காக அரசு ரூபாய் ஒரு கோடி வழங்கி உள்ள நிலையில், ஒரு சில இடங்களில் மட்டுமே புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மற்ற இடங்கள் முறையாக புதுப்பிக்காமல் விடப்பட்டு இருப்பதாக குழுவினர் தெரிவித்தனர்.

மேலும், "இதற்காகவா ஒரு கோடி?" வழங்கப்பட்டது என வியப்புடன் அதிகாரிகளிடம் உறுதிமொழி குழு கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரைகுறையாக உள்ள பணிகளை முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என உறுதிமொழி குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். பின்னர் மெயின் அருவியை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: G20 summit: கோலாகலமாக தொடங்கும் ஜி20 மாநாடு! உலக தலைவர்கள் இந்தியா வருகை!

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குற்றாலத்திற்கு காலை நேரத்தில் நான் மாறுவேடத்தில் வந்தேன். அப்போது பொதுமக்கள் என்னிடம் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டினர். அந்த வகையில், அருவியில் குளிக்கும் பெண்கள் பாதுகப்பு கருதி, ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு இடையே பெரியதாக தடுப்புச் சுவர் எழுப்பப்பட வேண்டும்.

இந்த தடுப்புச்சுவர், அருவியில் வெள்ளப்பெருக்கு வந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அமைய வேண்டும். அதோடு பெண்கள் உடை மாற்றும் கட்டிடங்கள் முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டும். ஆண்கள் பகுதியில் உள்ளது போல உயர் கோபுர மின்விளக்குகள் பெண்கள் பகுதியிலும் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் குற்றாலத்தில் விற்கக்கூடிய உணவு பண்டங்கள் முறையாக, சுகாதாரமாக விற்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினரால் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து உறுதிமொழி குழு சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் சுட்டிக் காட்டி கூறியுள்ளோம்" என்று வேல்முருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜேடர்பாளையம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 10 கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.