ETV Bharat / state

'முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை?' - எல். முருகன்

author img

By

Published : Sep 1, 2022, 7:14 PM IST

'முதலமைச்சர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர், ஆனால் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை' என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.

Etv Bharat எல் முருகன் பேச்சு
Etv Bharat எல் முருகன் பேச்சு

தென்காசி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று (ஆக.31) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, வீதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆறுகள் மற்றும் கடற்கரையில் கரைப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று (செப்.01) தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 34 விநாயகர் சிலைகளை நகரப்பகுதியிலுள்ள பல்வேறு சாலைகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று குண்டாறு நதியில் கரைக்க திட்டமிடப்பட்டது.

ஊர்வலத்தின்போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கலவரம்போல் இந்த ஆண்டும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் செங்கோட்டை நகரப் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கோட்டை நகரப்பகுதியிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மதியத்திற்கு மேல் மூடப்பட்டுள்ளது. அதேபோல், செங்கோட்டையினைச் சுற்றியுள்ள மதுபானக்கடைகள் மற்றும் விநாயகர் ஊர்வலங்கள் செல்லும் முக்கிய சாலைகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டன.

பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தொடங்கப்பட்ட இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் மேடையில் பேசியதாவது, “2 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாம் இன்று எல்லாப் பகுதியிலும் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடுகிறோம் என்றால், அதற்குக் காரணம் மறைந்த இராமகோபாலன் ஜி. தமிழ்நாடு ஒரு ஆன்மிக பூமி. இங்கு எந்த மாடல் வந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், காஷ்மீரில் Act-370 தூக்கி எறியப்பட்டுள்ளது. முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு வாக்குறுதிகள் பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எல்.முருகன் பேச்சு

ஆனால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக பொய் வாக்குறுதி கூறி ஏமாற்றி வருகிறது. முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவர், ஆனால் அவர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஓட்டுக்காக வேலை தூக்கியவர். இன்று உணர்விற்காக வாழ்த்துச்சொல்லமாட்டீர்களா? ஏன் இந்த இரட்டை வேடம். அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டியது முதலமைச்சரின் கடமை” என்றார்.

இதையும் படிங்க: 'சென்னையைப் போல் கிராமங்களிலும் அரசுப்பள்ளிகளில் கட்டமைப்புகள் தேவை..' - இயக்குநர் அமீர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.