ETV Bharat / state

குப்பையை அகற்றாததை சுட்டிக் காட்டியதால் கோபம்.. இளைஞருக்கு மண்டையில் கொட்டு.. கவுன்சிலர் மீது வழக்கு!

author img

By

Published : Aug 16, 2023, 2:03 PM IST

மேலகரம் பேரூராட்சியில் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை கவுன்சிலர் மண்டையில் கொட்டி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tenkasi
தென்காசி

குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை கவுன்சிலர் தாக்கிய சம்பவம்

தென்காசி: மேலகரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் 11வது வார்டு பகுதிக்குட்பட்ட நன்னகரம் ராமர் கோயில் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குப்பைகள் அள்ளப்படாமலும், சாலை ஓரங்களில் உள்ள சாக்கடை கழிவுகள் முறையாக சேகரிக்கப்படாமல் காய்ந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக தென்காசி மாவட்டம் மேலகரம் பகுதியில் குவியல் குவியலாக குப்பைகள் உள்ளதாக பலமுறை கோரிக்கை கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சொல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் துர்நாற்றம் வீசப்படுவதால் நோய் தொற்று பரவு அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர், தங்கள் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக கூறி தனது சமூக வலைதளத்திலும், வாட்ஸ் அப் வாயிலாகவும் கவுன்சிலருக்கு முறையிட்டு உள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரும், திமுக தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளருமான நாகராஜ் சரவணன், இது குறித்து தன்னிடம் நேரடியாக கூறாமல் ஏன் சமூக வலைதளத்தில்பதிவிட்டாய் எனக் கூறி அவரை கடுமைதாக பேசியதாக கூறப்படுகிறது.

அதோடு அவரை வாயில் அடித்து, மண்டையில் கொட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த வினோத் தற்போது தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் தனது பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதை தெரிவித்தவரை கவுன்சிலர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூகங்களில் நடைபெறும் சிறு தவறுகளை கூட சமூக வலைதளங்கள் மூலம் சுட்டிக்காட்டும் நபர்களுக்கு இத்தகைய தாக்குதல் சூழல் ஏற்பட்டால் சமூக சீரழிவு கேடுகளை சுட்டிக்காட்ட சமூக ஆர்வலர்களும், சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களும் எந்த ஒரு நிகழ்வுகளையும் பதிவிட தயங்குவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இது சமூகத்திற்கோ அல்லது சமூக செயற்பாட்டர்களுக்கோ நல்லதல்ல என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மேலகரம் பகுதியில் குப்பை குவிக்கப்பட்டதை வீடியோவை சமூக வலைதளங்கள் பதிவிட்ட வாலிபரை அடித்தது தொடர்பாக, குற்றாலம் காவல் துறையினர் கவுன்சிலர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக நித்தியானந்தா ஆசிரமம் அகற்றம்.. வருவாய்த்துறை நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.