ETV Bharat / state

தென்காசியில் இருந்து சூரியனுக்கு புகழை எடுத்து சென்ற பெண் விஞ்ஞானி.. பெருமிதத்தில் சகோதரர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 12:49 PM IST

Updated : Sep 2, 2023, 9:25 PM IST

Adithya L1 Project director: சூரியனுக்கு இன்று அனுப்பப்படும் ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குநரான பெண் விஞ்ஞானி தங்கள் பகுதிக்கு பெருமை சேர்த்திருப்பதாக அவரது சகோதரர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் இருந்து சூரியனுக்கு புகழை எடுத்துச் செல்லும் பெண் விஞ்ஞானி
தென்காசியில் இருந்து சூரியனுக்கு புகழை எடுத்துச் செல்லும் பெண் விஞ்ஞானி

தென்காசியில் இருந்து சூரியனுக்கு புகழை எடுத்து சென்ற பெண் விஞ்ஞானி

தென்காசி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வியக்கத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரோ சந்திராயன்-3 மூலம் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உலக நாடுகளால் ஆராய்ச்சி செய்யப்படாத பகுதியை ஆராய்ச்சி செய்து சொல்லப்படாத பல உண்மைகளை உலகத்திற்கு தெரியப்படுத்துவதன் மூலம் பல நாடுகளின் பாராட்டையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சந்திரனில் வெற்றிகரமாக தரை இறங்கிய சந்திராயன்-3 வெற்றியை தொடர்ந்து தற்போது இஸ்ரோ சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 என்கிற அதிநவீன விண்கலத்தை தயார் செய்து இன்று (செப் 2) விண்ணில் செலுத்துகிறது. சூரியனின் ஆராய்ச்சியில் இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலன்களை அனுப்பி உள்ளன.

இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றி பெற்றால் சூரிய ஆராய்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை பெரும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த ஆதித்யா எல்1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி செயல்பட்டு வருகிறார்.

நிகர் சாஜி தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையை சேர்ந்தவர். இவர் தனது ஆரம்ப கல்வியை செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கற்றார். நிகர் சாஜி தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது அப்பகுதி மக்களுக்கு பெருமையை தேடி தந்துள்ளது.

இவர், மேல்நிலை கல்வியை செங்கோட்டை எஸ்.ஆர்.எம் பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் நிகர் சாஜி, 1982 முதல் 1986 வரை தனது இளநிலை பொறியியல் படிப்பை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்துள்ளார். தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் நிகர் சாஜியின் கணவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மகள் டாக்டராக உள்ளார். மகன் வெளிநாட்டில் என்ஜினீயரிங் பயின்று வருகிறார்.

இதையும் படிங்க: Aditya-L1: சூரியனையும் தொட்டுவிடலாம்.. ஆதவனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம்! இஸ்ரோ ரெடி!

ஆதித்யா எல்-1 ஆய்வு திட்டத்தின் முழு பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதித்யா செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அதை பி.எஸ்.எல்.வி, எக்ஸ்எல் (சி-57) (PSLV-C57/Aditya-L1 mission) என்ற ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன் மூலம் சூரியனின் வெளிப் பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்.

இது குறித்து செங்கோட்டையில் உள்ள விஞ்ஞானி நிகர் சாஜியின் சகோதரர் ஷேக் சலீம் நமது ஈடிவி பாரத்திடம் அளித்த பிரத்யேக பேட்டியில், “இஸ்ரோ சூரியனுக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் செலுத்தி இருப்பது, நமது நாட்டிற்கு மிகப்பெரும் பெருமை. அதில், எனது சகோதரி இடம் பெற்றிருப்பதால் எங்கள் பகுதிக்கும், நாட்டிற்கும் பெருமை கிடைத்துள்ளது.

நிகர் சுல்தானா 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அவர் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். எங்கள் தந்தைதான் எங்களுக்கு ரோல் மாடல். எனது தந்தை அப்போதே பட்டப் படிப்பை முடித்து இருந்தார். ஆனால், அவர் கடைசி வரை விவசாயம்தான் பார்த்தார். அப்போது அவர் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கல்வியில் உயர வேண்டும் என எங்களிடம் கூறுவார்.

அதன் விளைவாக, என் சகோதரி இன்று விஞ்ஞானியாக வளர்ந்து சாதித்துள்ளார். நானும் விஞ்ஞான துறையில் இருந்து விட்டு இறுதியாக கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தொடர்ச்சியாக, இஸ்ரோ திட்டங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

நிகர் சுல்தானா பயின்ற எஸ்.ஆர்.எம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி நம்மிடம் கூறுகையில், ”எங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவி நிகர் சுல்தானா ஆதித்யா விண்கலத்தின் திட்ட இயக்குனராக பணிபுரிந்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமையும் கொடுத்துள்ளது.

அதுவும் ஒரு பெண்ணாக இருந்து விண்வெளி துறையில் சாதனை படைத்திருப்பது, எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நிகர் சுல்தானாவின் குடும்பம் ஒரு பாதுகாப்பான சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்ததன் விளைவாகத்தான், ஒரு பெண்ணாக அவர் விண்வெளி துறையில் சாதனைப் படைக்க முடிந்துள்ளது” எனக் கூறினார்.

இதுகுறித்து செங்கோட்டை வாஞ்சிநகரை சேர்ந்த வார்டு உறுப்பினர் பினாஷா நம்மிடம் கூறுகையில், "எங்கள் பகுதியைச் சேர்ந்த நிகர் சுல்தானா ஆதித்யா விண்கல திட்டத்தில் திட்ட இயக்குனராக பணிபுரிவது செங்கோட்டை மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளது” என்று கூறினார்

அதே வாஞ்சிநகரைச் சேர்ந்த ரஹீம் கூறுகையில், ”ஒரு சாதாரண அரசு பள்ளியில் பயின்று அங்கு முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற நிகர் சுல்தானா, இன்று சூரியனை ஆய்வு செய்யும் விண்கல திட்டத்தில் பணிபுரிந்து வருவது எங்களுக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: World Vulture Awareness Day : பறவைகளின் அரசன் "பாறு கழுகு"... அழிவில் இருந்து மீளுமா! அழிவிற்கு என்ன காரணம்?

Last Updated :Sep 2, 2023, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.