ETV Bharat / state

உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு 10ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரித்த கிராம மக்கள்

author img

By

Published : Jan 20, 2022, 11:10 PM IST

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகேவுள்ள கிராமத்தில் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு நினைவு மணிமண்டபம் அமைத்து, அதற்கு ஆண்டுதோறும் தவறாமல் நினைவு அஞ்சலி செலுத்திவரும் கிராம மக்கள் 10ஆவது ஆண்டு நினைவஞ்சலியை வெகு விமரிசையாக நடத்தினர்.

Villagers observe 10th anniversary tribute to the died Jallikattu bull
Villagers observe 10th anniversary tribute to the died Jallikattu bull

சிவகங்கை: சிவகங்கையை அடுத்துள்ளது, சிவல்பட்டி கிராமம். இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் இங்குள்ள மந்தக்கருப்பண சுவாமி கோயிலுக்காக கிராம மக்கள் சார்பில், கோயில் காளை வளர்க்கப்பட்டு வந்தது.

இந்தக் காளை பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுவந்ததுடன் அந்தக் காளை மாட்டின் பெயர் சிவல்பட்டி மந்தக்கருப்பண சுவாமி கோயில் காளை என்றே அழைக்கப்பட்டு, இந்தக் கிராமத்தின் பெயரையும் பறைசாற்றி இந்த கிராமத்தினை அனைத்துப் பகுதியிலும் தெரிய செய்துள்ளது.

இந்தளவு பெயர்பெற்ற காளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டில் பங்கேற்றபின், உடல் நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அதனை கிராமத்தின் நடுவேவுள்ள மந்தக் கருப்பண சுவாமி கோயில் அருகிலேயே புதைத்துள்ளனர்.

பின்னர் அங்கேயே கிராமத்தினர் சார்பில் மணிமண்டபமும் அமைக்கப்பட்டு, அதில் அந்தக் காளையின் முழு உருவத்தையும் சிலையாக வடித்து, அதனையும் தங்களது குலதெய்வமாக வழிபாடு செய்வதுடன் அந்தக் காளை இறந்த தினத்தினை மனிதர்கள் தங்களது முன்னோர்கள் இறந்த தினத்தை நினைவு தினமாக அனுசரிப்பதைப்போல் இன்றளவும் அனுசரித்துவருகின்றனர்.

உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு 10ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரித்த கிராம மக்கள்

10 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த ஆண்டு 10ஆவது நினைவு தினம் என்பதால், அந்த காளையின் உருவச் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்ததுடன் தற்போது அந்த காளைக்கு இணையாக கிராம மக்கள் சார்பில் வளர்க்கப்படும் காளைக்கு அலங்காரம் செய்து அனைத்து மரியாதைகளையும் செய்தனர்

பின், மந்த கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்து, அதனை கிராம மக்களே வணங்கி பொங்கலிட்டு, அனைவருக்கும் பகிர்ந்தனர்.

மேலும் அந்த உயிரிழந்த காளையின் உருவச்சிலை முன்பு அனைவரும் புகைப்படம் எடுத்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டதுடன் கிராம சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றதுடன் அதில் கலந்துகொண்ட குழந்தைகள் ஏமாற்றத்தை சந்திக்க கூடாது என்பதற்காக அனைவருக்கும் பரிசுகளை வழங்கி கிராம மக்கள் கெளரவித்தனர்.

இறந்த காளைக்கு 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய கிராம மக்களின் இந்தச் செயல் அனைவரிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா - இன்று எத்தனை பேர் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.