ETV Bharat / state

உக்ரைன் போர் - ரயிலில் இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பு... கத்தியை காட்டி மிரட்டிய மாணவர்கள்...

author img

By

Published : Mar 9, 2022, 7:17 AM IST

உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு தவித்து வந்த மாணவர்களுக்கு ரயிலில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கத்தியை காட்டி மிரட்டி ரயிலில் இடம் பிடித்துள்ளனர்.

வீடு திரும்பிய மாணவர்
வீடு திரும்பிய மாணவர்

சிவகங்கை: இளையான்குடி அருகே அதிகரைவிளக்கு கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் திவின், மகள் வேகா இருவரும் உக்ரைனில் படித்து வந்தனர். மருத்துவக் கல்லூரியில் வேகாவும், ஏரோபேஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் திவினும் கார்கிவ் நகரில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. அதிலிருந்து உயிருக்கு பயந்து பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அங்கிருந்து வந்த மாணவன் திவினிடம் கேட்டபோது, “ஐந்து நாள்களாக வெளியில் எங்கும் செல்லவில்லை. குடிக்க தண்ணீர் இல்லை, உணவு கிடைக்கவில்லை பிரட்டுகளை (Bread) மட்டுமே உண்டு உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையில் அங்கேயே தங்கி இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே ரஷ்யா வீசிய குண்டுகளால் கட்டடம் அதிர்ந்தது.

ரயிலில் செல்ல அனுமதி மறுப்பு

அப்போது எங்கள் உயிர் எங்களிடம் இல்லை, ஓயாத வெடிச் சத்தங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு காத்திருந்தோம். போர் தொடங்கியபோது இந்தியர்கள் இருந்தால் அவர்களை பணயமாக வைத்து உக்ரைனியர்களை ரஷ்யர்களிடம் இருந்து பாதுகாக்கலாம் என எண்ணி எங்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. ரஷ்யாவின் போர் தீவிரம் அடைந்ததால் வேறுவழியின்றி உக்ரைனில் இருந்து இந்தியர்களும், மற்ற நாட்டவர்களும் வெளியேறினோம்.

ரயில் ஏறுவதற்காக ரயில் நிலையத்திற்கு சென்றோம். அங்கு இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்களை ரயிலில் ஏற்ற மறுத்தனர். வட இந்திய இந்தியர்களில் ஒருவர் கத்தியை எடுத்து மிரட்டியதால் வேறுவழியின்றி ரயிலில் இடம் கொடுத்தனர். நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டு விடுவோம் என்று மிரட்டியதால் அவர்களுக்கு ரயிலில் இடம் கொடுத்தனர்.

ரயில் ஏறும்போது அங்குள்ள உக்ரைன் காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்தினார்கள். கூட்டம் கலைந்து ஓடியதும் அவர்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டும் ரயிலில் அனுமதித்தனர். இதில் ரயிலில் பயணிக்க 8 பேர் சேர்ந்து ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் கொடுத்து அதற்குப் பின்னரே அனுமதித்தனர். ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரம் ஹங்கேரி எல்லையை அடைய 80 மணி நேரம் பயணம் செய்தோம்.

நல்ல உணவு

இந்திய தூதரகத்தினர் கார்கிவ் நகரின் எல்லைக்கு வரவழைத்தனர். அங்கிருந்து இந்தியர்கள் வெளியில் செல்ல எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஹங்கேரிக்கு வந்த பின்பு தான் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தோம். சென்னை விமான நிலையத்தை அடைந்தவுடன் தமிழ்நாடு அரசு அனைத்து வசதிகளையும் செய்து தந்தது. ஐந்து நாள்களுக்குப் பின்னர் தான் நல்ல உணவு சாப்பிட முடிந்தது.

வீடு திரும்பிய மாணவர்

விமான வசதி இல்லாததால் எங்களுக்கு தனியார் கார் ஏற்பாடு செய்து வீடு வரை எந்த கட்டணமும் இல்லாமல் கொண்டு வந்து பாதுகாப்பாக விட்டுச் சென்றனர். இந்திய அரசுக்கும் எங்கள் மேல் அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களது கல்வி தொடர்வது கேள்விக்குறியாகிவிட்டது. எனவே ஒன்றிய, மாநில அரசுகள் எங்களைப் போன்ற அங்கிருந்து வந்த மாணவ மாணவிகளின் கல்வியினை தொடர்வதற்கு முழு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்றார்.

எப்போது நிலைமை சீராகும்?

இது குறித்து மாணவர்களின் தந்தை காளிமுத்துவிடம் கேட்டபோது, “நாங்கள் இந்தியாவில் மருத்துவம் படிக்க அதிக செலவு என்பதால் வேறு வழியின்றி உக்ரைனில் படிக்க அனுப்பி வைத்தோம். ஆனால், தற்போது அங்கு போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு எப்போது நிலைமை சீராகும் என்பது தெரியவில்லை.

எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் எங்கள் குழந்தைகளின் கல்வியை தமிழ்நாட்டில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்ரைனில் இருந்து மீட்க உதவிய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: 'இந்திய‌த் தூதரகம் எங்களுக்கு உதவவில்லை' - தமிழ்நாடு மாணவி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.