ETV Bharat / state

WORLD WATER DAY.. 'தண்ணீரில் தன்னிறைவு கண்டோம்' - உழைப்பை தந்து ஊருணி உருவாக்கிய சிவகங்கை கிராம மக்களின் சாதனை

author img

By

Published : Mar 22, 2022, 7:16 AM IST

Updated : Mar 22, 2022, 10:15 AM IST

தண்ணீருக்காக உலகமே போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பல்லாண்டு கால தண்ணீர் கனவை தங்களது சொந்த உழைப்பில் உருவான ஊருணி மூலம் நிறைவேற்றி, சிவகங்கை மாவட்டம் வண்டல் கிராம மக்கள் சாதனை படைத்துள்ளனர். அது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு.

'தண்ணீரில் தன்னிறைவு கண்டோம்' - உழைப்பைத் தந்து ஊருணி உருவாக்கிய சிவகங்கை கிராமத்து மக்களின் சாதனை வரலாறு
'தண்ணீரில் தன்னிறைவு கண்டோம்' - உழைப்பைத் தந்து ஊருணி உருவாக்கிய சிவகங்கை கிராமத்து மக்களின் சாதனை வரலாறு

சிவகங்கை:தமிழ்நாட்டின் வறண்ட தென் மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. சிவகங்கை மாவட்ட கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. முன்பு இருந்தே பாரம்பரியமாக நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ள கண்மாய், ஏரி, ஊருணி, குளங்களே முக்கிய நீராதாரங்கள் ஆகும். இந்நிலையில், குடிநீருக்காக நீண்ட நெடுங்காலமாய் போராடி வரும் எண்ணற்ற கிராமங்களுள் ஒன்றுதான் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள வண்டல் கிராமம்.

காலம் காலமாக 'தண்ணியில்லா காட்டுக்கு மாத்திருவேன்..' 'தவிச்ச வாய்க்கு தண்ணி தராத பய ஊரு..' என்பதெல்லாம் நாம் அன்றாடம் கேட்டுப் பழகிய சொற்கள். இதுபோன்ற வறட்சி மிகுந்த நிறைய கிராமங்கள் இன்றைக்கும் கடுமையான போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் உள்ளன. வண்டல் கிராமமும் அப்படியொரு நீண்ட வரலாற்றை கொண்ட மண்தான். இங்கு அமைக்கப்பட்டுள்ள ஊருணிக்கு உதவிய பிரதான் நிறுவனத்தின் நிர்வாகி மோகன் கூறுகையில்,

'நாங்க மொத முதலில் இந்த ஊருக்கு வந்தப்போ, இந்த மக்களோட முதல் தேவையா குடிநீர்தான் இருந்தது. அதுக்காக நிறைய சிரமப்பட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா அவங்ககிட்ட பேசினோம். எறும்பு ஊர கல் தேயுங்கற மாதிரி, ஊருணி அமைக்க ஒத்துக்கிட்டாங்க. அதுக்கான இடம் குறித்து கேள்வி எழுந்தபோதுதான், ஊருல இருக்கற 23 குடும்பங்கள் தங்களோட சொந்த பட்டா நிலத்த தானமா தர்றதுக்கு முன் வந்தாங்க. அதோட இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.80 லட்சமென்றால் பாத்துக்கோங்களேன்' என்று கூறினார்.மேலும் பட்டா நிலம் என்றாலும், அதனைப் பொதுப்பயன்பாட்டிற்கு மாற்ற மிகக் கடுமையான நிபந்தனைகள், நடைமுறைகள் உள்ளதை நகைச்சுவையுடன் விவரித்தார்.

தடைகளைத் தகர்த்த கிராம மக்கள்

பூர்வாங்க வேலைகள் நிறைவுற்றவுடன் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஊருணி அமைக்கும் பணிகள் தொடங்கியபோது, தொடர் மழை காரணமாக அந்தப் பணிகள் மிகவும் தள்ளிக் கொண்டே சென்றதை பிரதான் இண்டிகோ திட்டத்தின் கண்மாய்ப் பணியாளர் பிரபாகரன் விளக்கினார். ஊர்கூடித் தேரிழுத்தால் நிலைக்கு வராமல் போகுமா என்ன..? அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள் என்றால் அது வெறும் புகழ்மொழி அல்ல.

வண்டல் கிராம ஊராட்சியின் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், 'இது உண்மையிலேயே மிக பிரம்மாண்டமான வேலைதான். தண்ணீருக்காக எங்களோட மக்கள் கடுமையான துன்பத்த அனுபவிச்சாங்க. ஊருல கண்மாய் இருந்தாலும், குடிநீருக்காக எங்க சொந்த நிலத்துல நாங்க உருவாக்குன இந்த ஊருணி வரலாற்று சாதனைன்னுதான் சொல்லணும்' என்கிறார் நெகிழ்ச்சியுடன். அதே ஊரைச் சேர்ந்த பெரியவர் ராஜேந்திரன் கூறுகையில், 'காவிரி குடிநீர்த் திட்டம், கிராம குடிநீர்த் திட்டம் எனத் திட்டங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில காலங்களில் தண்ணீரின்றி அவதிப்படுகின்ற நிலை இனி இல்லை என்பதை நினைத்தாலே மகிழ்ச்சியளிக்கிறது' என்கிறார்.

கிராம மக்களின் நெகிழ்ச்சியான செயல்

பிரதான் நிறுவனத்தின் திட்டத்தலைவர் முனைவர் சீனிவாசன் கூறுகையில், 'இளையான்குடி ஒன்றியத்தில் குடிநீர்ச் சிக்கல்கள் இல்லாத கிராமங்கள் இல்லை. ஆனால், அதற்காக முயற்சி மேற்கொண்ட வண்டல் கிராம மக்களை நாம் பாராட்டலாம். 1.85 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், சுமார் 2 மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி, நேர்த்தியான கரைகள் அமைத்து, 10 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு இந்த ஊருணியை உருவாக்கியுள்ளனர்.

இதற்காக வண்டல் கிராமத்தார் அளித்த உழைப்பு மட்டுமன்றி, அவர்களது பங்குத் தொகையாக ரூ.2 லட்சத்து 85 ஆயிரமும், மணல், ஜல்லி, கற்கள் என வழங்கியதன் மூலம் 'நமக்கு நாமே' என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர். ஒருமுறை இந்த ஊருணி நிறைந்தால், ஆண்டில் 9 மாதங்களுக்குத் தண்ணீர் சிக்கலே எழாது' என்கிறார் பெருமிதத்துடன்.

பிரதான் நிறுவனத்தின் செயல்பாடு

சிவகங்கை மாவட்டத்திலுள்ள வடவிருக்கை, கிளாஞ்சுனை, சங்கணி, கட்டனூர், அளவிடங்கான், நல்லூர், குறிச்சி, தென்கடுக்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வரவனி ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரதான் என்ற தொண்டு நிறுவனம் பணி செய்து வருகிறது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நரேந்திரநாத் கூறுகையில், 'வறுமை ஒழிப்பு, நீராதார மேம்பாட்டுப் பணிகளில் பிரதான் நிறுவனத்துக்கு நீண்டு நெடிய அனுபவம் உண்டு. வட மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். தமிழ்நாட்டின் வறட்சி மிகுந்த சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் தண்ணீர் பிரச்சனைகளை சரி செய்ய, மக்களின் தேவையை உணர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வண்டல் கிராமம் அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. நமது பாரம்பரியமான நீர்நிலைகளை பாதுகாப்பதுடன், மக்களின் பங்கேற்புடன் நீர்நிலைகள் உருவாக்கத்திலும் பிரதான் நிறுவனத்தின் இண்டிகோ சிஎஸ்ஆர் திட்டம் தொடர்ந்து பங்களிப்புச் செய்யும்' என்கிறார்.

உழைப்பை தந்து ஊருணி உருவாக்கிய சிவகங்கை கிராம மக்களின் சாதனை

குறைந்த நாட்களில் விரைந்து வேலை

அதிகபட்சம் 75 வேலை நாட்களில் ரூ.6 லட்சம் செலவில் 1.85 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு ஊருணியை உருவாக்கி படைக்கப்பட்டுள்ள இந்த சாதனை, ஒரு வேளை அரசோ அல்லது வேறு ஒரு ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் நடைபெற்றிருக்குமானால், ஆறு அல்லது ஏழு மடங்கு செலவு அதிகரித்திருக்கும் என்கிறார் உள்ளூரைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர்.

இந்த ஆண்டின் உலக தண்ணீர் தினம் (மார்ச் 22, 2022) நிலத்தடி நீரை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு நம்மை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த நாட்களில் பொழியும் அதிக மழைநீரை சேமித்து வைக்கும் கண்மாய், ஏரி, குளம், ஊருணி போன்ற பாரம்பரிய சேமிப்பு முறைகள் மிக அவசியமானவை என்பதை நமது முன்னோர் மட்டுமன்றி, தற்போது வண்டல் கிராமத்து மக்களும் உறுதி செய்துள்ளனர் என்பதே இந்த தண்ணீர் தினத்தில் நாம் உணர வேண்டிய உண்மை.

இதையும் படிங்க:நீர் மேலாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம்: திமுக எம்.எல்.ஏ தமிழரசி

Last Updated :Mar 22, 2022, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.