ETV Bharat / state

25 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை வசதி பெறும் ஏற்காடு கிராமங்கள்!

author img

By

Published : Mar 17, 2023, 11:08 PM IST

ஏற்காடு வட்டம் பெலாக்காடுக்கு உள்பட்ட மக்களின் 25 ஆண்டு கால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை வசதி பெறும் ஏற்காடு கிராமங்கள்!
25 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை வசதி பெறும் ஏற்காடு கிராமங்கள்!

சேலம்: சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, இன்று (மார்ச் 17) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய மேனகா, “சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் பெலாக்காடு தரப்பிற்கு உள்பட்ட மாரமங்கலம், கேளையூர், செந்திட்டு, அரங்கம், சின்ன மதூர், மதூர், பெலாக்காடு, கே.நார்த்தஞ்சேடு மற்றும் தும்பிப்பாடி ஆகிய கிராமங்களில் சுமார் 4,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதி பிரச்னைக்குரியதாக இருந்தது.

சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா செய்தியாளர் சந்திப்பு

தற்போது ஏற்காடு முதல் கொட்டச்சேடு வரை செல்லும் சாலையில், ஆத்துப்பாலம் என்னும் இடத்தில் இருந்து கூட்டு முட்டல், மாரமங்கலம், கேளையூர், பெலாக்காடு, மதூர், அரங்கம், செந்திட்டு, நார்த்தஞ்சேடு, தும்பிப்பாடி வரை மட்டுமே தார்சாலை வசதி உள்ளது. அதற்கு மேல் சரியான சாலை வசதிகள் கிடையாது. இதனால் இந்த கிராம மக்கள், கொட்டச்சேடு மற்றும் ஏற்காடு செல்ல வேண்டும் என்றால், 28 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் தற்போது இதற்கு தீர்வு காணும் வகையில், களம் 6 மற்றும் களம் 7 ஆகிய இரண்டு வழித்தடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. களம் 6 தனியார் எஸ்டேட் வழியாகவும், களம் 7 தனியார் எஸ்டேட் மற்றும் பட்டாதாரர்கள் நிலம் வழியாகவும் செல்கிறது. இதில் களம் 6இல் சாலை அமைக்க நிலம் எடுக்க முடிவு செய்தபோது, தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது.

ஆனால், களம் 7இல் சாலை அமைக்க தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர். மேலும், 9 தனியார் பட்டாதாரர்கள் தங்களது 0.9 கிலோ மீட்டர் தொலைவிலான நிலங்களை சாலை அமைக்க தானமாக, ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வழங்கி உள்ளார்கள். ஆகையால், தற்போது களம் 7இல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

களம் 6 மற்றும் களம் 7 ஆகிய இரண்டு வழியாகவும் சாலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆனால், களம் 6இல் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், தற்போது களம் 7இல் மட்டும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. களம் 6இல் சாலை வசதிகள் மேற்கொள்ளும்போது, கே.நார்த்தஞ்சேடு மற்றும் கும்பிப்பாடி ஆகிய கிராமங்களுக்கு 1.5 கிலோ மீட்டர் தொலைவு அதிகமாக இருக்கும்.

அதேநேரம் களம் 7இல் சாலை வசதிகள் மேற்கொள்ளும்போது, 300 மீட்டர் மட்டுமே கூடுதல் தொலைவாக இருக்கும். இந்த இரண்டு சாலை வசதிகளுமே மேற்கொள்ளவில்லை என்றால், 28 கிலோ மீட்டர் சுற்றிப் போக வேண்டிய நிலை உள்ளது. மலைவாழ் மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிட, மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் அடிப்படைத் தேவைகளான சாலை வசதிகள், குடிநீர் மற்றும் மின்சார வசதி உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவதற்கு மலைவாழ் மக்கள் போதிய ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சோத்துப்பாறை அணையில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.