ETV Bharat / state

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி விசிக ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Oct 28, 2020, 8:57 PM IST

சேலம்: மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சேலம், விருதுநகர், கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசிக ஆர்ப்பாட்டம்
விசிக ஆர்ப்பாட்டம்

மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தியும் சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தி புகைப்படம் வெளியிட்ட பாஜக சேலம் மாவட்ட பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு உடனே இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து தவறாக சித்தரித்த சேலம் மாவட்ட பாஜக பொறுப்பாளர் கோபிநாத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணிச் செயலாளர் இமயவரம்பன், ”மருத்துவ மேல் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது. இதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறது. உடனே மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்கிட முன்வர வேண்டும்” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 விசிக தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

விசிக ஆர்ப்பாட்டம்

இதைப் போல மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்திலும், கொடைக்கானலிலும் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சடகோப ராமானுஜர் ஜீயர் திருமாவளவனைத் தரக் குறைவாகப் பேசியதோடு, அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் வீடியோ வெளியிட்டார்.

இதனால் அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க:ஒபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.