ETV Bharat / state

salem Sago: புவிசார் குறியீடு பெற்றது சேலம் ஜவ்வரிசி... மரவள்ளி கிழங்கு விவசாயிகள் மகிழ்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 7:28 PM IST

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது இதன் மூலம் இந்தியாவிலேயே 59 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

புவிசார் குறியீடு பெற்றது சேலம் ஜவ்வரிசி
புவிசார் குறியீடு பெற்றது சேலம் ஜவ்வரிசி

சேலம்: ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு ஒன்றிய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்துடன் போலியாக வேறு பெயரில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும் .

அந்த வகையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடிச் சேலை, காஞ்சிப்பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, உடன்குடி பனங்கற்கண்டு சோழவந்தான் வெற்றிலை , மார்த்தாண்டம் தேன் உட்பட 45 உணவு வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை , நெகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி , மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 59 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் பதினைந்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ளது .

இந்த நிலையில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள சேகோ சர்வர் தொழில் கூட்டுறவு சங்க வளாகத்தில், ஜவ்வரிசிக்கு அறிவிக்கப்பட்ட புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் நோடல் அலுவலர் சஞ்சய் காந்தி அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழை வழங்கினார். இதனை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சேகோர்வ் செயலாட்சியர் லலித் ஆதித்ய நீலம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் பேசிய சஞ்சய் காந்தி கூறுகையில்: “சேலம் ஜவ்வரிசி என்ற பெயரை மட்டுமே இனி பயன்படுத்த வேண்டும் என்பது புவிசார் குறியீடு சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1843 ஆம் ஆண்டிலிருந்து சேலத்தில் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலேயே சேலம் ஜவ்வரிசி புவிசார் குறியீடு பெற தகுதியான உணவு பொருள் என்பதால் மத்திய அரசு இந்த சான்றிதழை இன்று வழங்கி இருக்கிறது. இதனால் சேலத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி தரமானதாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

மேலும் ஜவ்வரிசி உற்பத்தி அதிகரிக்க செய்யும். ஜவ்வரிசி வணிகமும் உச்சத்தை தொடும். இதனால் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வணிகர்கள் தொழிலாளர்கள் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் ஒரு புதிய பொருளாதார உயர்வை எட்ட முடியும் .இதே போல இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் சேலம் ஜவ்வரிசி விற்பனை கண்காட்சி அரங்குகள் மத்திய அரசு சார்பில் அமைக்கப்படும்.

இதற்கான அனைத்து செலவுகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் .வெளிநாடுகளுக்கும் சேலம் ஜவ்வரிசி ஏற்றுமதி செய்ய எதிர்காலத்தில் பிரகாசமான வாய்ப்பு ஏற்படும்" என்று தெரிவித்தார். மேலும் சஞ்சய் காந்தி, ”சேலம் ஜவ்வரிசி” பெயரை பயன்படுத்தி போலியான ஜவ்வரிசி விற்பனை செய்தால் இந்திய அளவில் அவர்கள் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து ஆறு மாதம் சிறை தண்டனையும் கிடைக்க இந்த புவிசார் குறியீடு சான்றிதழ் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதனையடுத்து ஆட்சியர் கார்மேகம் பேசும் பொழுது இன்றைய நாள் ’மிகவும் பெருமிதமான நாள்’. சேலம் ஜவ்வரிசி புவிசார் குறியீடு பெற்றுள்ளது மகிழ்ச்சியான விஷயம். மரவள்ளி கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்கும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார். இந்த விழாவில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தோட்டக்கலை இயக்குனர் மற்றும் சேகோ சார் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:Train Coach Booking: ரயில் பெட்டி அல்லது முழு ரயிலையும் முன்பதிவு செய்வது எப்படி? முழுத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.