ETV Bharat / state

மகளிர் உரிமைத் தொகைக்கு புரோக்கர் கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கை: சேலம் ஆட்சியர் எச்சரிக்கை!

author img

By

Published : Jul 10, 2023, 10:55 PM IST

மகளிர் உரிமைத்தொகை வாங்கி தருவதில் ஈடுபடும் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்
மகளிர் உரிமைத்தொகை வாங்கி தருவதில் ஈடுபடும் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மகளிர் உரிமைத்தொகை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி பெண்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடும் புரோக்கர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.

சேலம்: சேலம் மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகள் வரும் ஜூலை 24-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிப்பது குறித்த விளக்கத்தை, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆயிரத்தி 541 ரேஷன் கடைகள் வாயிலாக மகளிருக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கபட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

500 ரேஷன் கார்டுகள் உள்ள கடைகளில் ஒருபதிவு மையமும், 500 முதல் 600 ரேஷன் கார்டுகள் உள்ள கடைகளில் இரண்டு பதிவு மையங்களும், ஆயிரம் முதல் ஆயிரத்தி 500 ரேஷன்கார்டு உள்ள இடங்களில் மூன்று பதிவு மையங்களும், 6 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ள கடைகளில் நான்கு பதிவு மையங்களும் செயல்பட உள்ளது. மேலும் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் 2ஆயிரத்து 977 பேர், இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்ற உள்ளனர்.

மேலும் இந்தப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பணி மற்றும் பதிவு செய்யும் பணி முழுமையாக கண்காணிக்கப்படும். சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஜூலை 24ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்ட முகாம் 17ஆம் தேதி தொடங்கும். ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் விண்ணப்பங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கி, ரேஷன் கடைகளில் அமைக்கப்படும் பதிவு மையங்கள் வாயிலாக பதிவு செய்யப்படும். அனைத்து பணிகளும் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படுவதால் கட்டணம் ஏதும் செலுத்தப்பட தேவையில்லை.

அதனால் பொதுமக்கள் யாரும் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம். நாளொன்றுக்கு 30பேர் முதல் 50பேர் வரை விண்ணப்பங்களை பதிவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அலைமோத வேண்டாம். தங்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் ரேஷன் கடைகளுக்கு வருகை தந்தால் போதும். விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு முழுமையான கள ஆய்வு மற்றும் பரிசீலனைக்கு பின்னரே உரிமை தொகை வழங்கப்படும்‌. தங்களுக்கு தகுதி உள்ளது ஆனால் நிராகரிக்கப்பட்டதாக நினைத்தால் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.

உரிமைத்தொகை பெறுவதற்காக இடைத்தரகர்களை யாரும் நம்பவேண்டாம், இடைத்தரகர்கள் யாரேனும் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களில் வங்கிகணக்கு இல்லாத மகளிருக்கு, வங்கிகணக்கு தொடங்கிட அரசு தரப்பிலிருந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் ஆதார் இல்லாதவர்கள், ஆதார் அட்டை பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். தேர்தல் பணிகள் போன்று, மகளிர் உரிமைத்தொகை பதிவு பணிகளும் நடைபெற்று வருகிறது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று பொது மக்களிடம் திட்டம் பற்றிய விளக்கங்களை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைத் திட்டப்பதிவு... வந்தது இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.