ETV Bharat / state

தனியார் மருத்துவமனை மோகத்தை குறைக்க அரசு 'பே வார்டுகள்': மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Feb 15, 2023, 1:46 PM IST

மக்கள் மத்தியில் தனியார் மருத்துவமனை மீதான மோகத்தை குறைக்கவே தமிழ்நாடு அரசு 'பே வார்டுகள்' எனும் நடைமுறையை கொண்டு வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

தனியார் மருத்துவமனை மீதான மோகத்தை குறைக்கவே அரசு 'பே வார்டுகள்': மா.சுப்பிரமணியன்

சேலம்: சேலத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனையொட்டி சேலம் தொங்கும் பூங்கா மாநகராட்சி அரங்கில் பள்ளி மாணவ மாணவியருக்குக் குடற்புழு நீக்க மாத்திரைகளைத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பிறகு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரூ.1.25 கோடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கட்டண சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "சென்னையில் உள்ளது போல் சேலம், மதுரை, கோவை அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு துவங்கப்படும் என 2022ல் அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலத்தில் தற்போது 10 கட்டண படுக்கைகள் வசதி கொண்ட சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளதாகவும், இதில் தனியார் மருத்துவமனையை விட கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னைக்கு வெளியே முதன் முதலில் சேலத்தில்தான் 'பே வார்டுகள்' துவங்கப்பட்டுள்ளதாகவும், இதனை தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் துவங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்த அவர் மக்கள் மத்தியில் தனியார் மருத்துவமனை மீதான மோகத்தை குறைக்கவே தமிழ்நாடு அரசு 'பே வார்டுகள்' எனும் நடைமுறையை கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், நாடு முழுவதும் தேசிய அளவில் குடற்புழு நீக்க தினம் அனுசரிக்கப்படுவதற்கு முதன் முதலில் வித்திட்டது திமுக அரசு தான் என்றார். மேலும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க உள்ளதாகவும், இதற்காக 1 லட்சத்து 23 ஆயிரத்து 620 இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2.69 கோடி பேர் பயன்பெற உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியில் 1.30 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சர்ப்ரைஸ் விசிட் மூலம் அரசு மருத்துவர்கள் பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு பணிக்கு செல்வது தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளிக்காமல் உடனடியாக எழுந்து நின்று, 'நல்ல விஷயங்களைப் பேசி கொண்டு இருக்கிறோம்!...இப்ப போய்'..." என்று கூறி செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்துக் கொண்டு புறப்பட்டு சென்றார்.

இதையும் படிங்க: திருச்சி மாநகராட்சி பகுதியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.