ETV Bharat / state

இரவில் பிரியாணி சாப்பிட காரில் சென்றபோது நேர்ந்த சோகம்: 3 இளைஞர்கள் பலி!

author img

By

Published : Apr 14, 2023, 3:21 PM IST

அரக்கோணத்தில் இருந்து காரில் சென்னை புளியந்தோப்பிற்கு இரவு பிரியாணி சாப்பிடச்சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

car accident
விபத்து

ராணிப்பேட்டை: அரக்கோணம், சோளிங்கர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜீவகிருஷ்ணன் என்பவரது மகன் விஷ்ணு (26), அரக்கோணத்தைச் சேர்ந்த யாமனத் (29), அரக்கோணம் கணேச நகர் 12-வது தெருவைச் சேர்ந்த பாபுவின் மகன் அஸ்வின் ராஜ் (25), அரக்கோணம் பாலசுந்தரம் தெருவைச்சேர்ந்த குபேந்திரனின் மகன் பாலாஜி பிரசாந்த் (26), அரக்கோணம் அசோக் நகர் பகுதியைச்சேர்ந்த செல்வம் என்பவரது மகன் மதன் (26) ஆகிய 5 பேரும் அரக்கோணத்தில் இருந்து சென்னை புளியந்தோப்பில் இரவு கடையில் பிரியாணி சாப்பிடுவதற்காக காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அப்போது திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த இருளஞ்சேரி என்ற பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியாற்றும் 13 ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, அரக்கோணத்திற்குச்சென்று கொண்டிருந்த வேன் மீது மோதி, எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

அதன் பின்னர் விபத்து நிகழ்ந்த பகுதியில் மக்கள் கூடினர். பின் இந்த விபத்து குறித்து போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவல் அறிந்த மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியது யார்? எப்படி விபத்து நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை செய்தனர்.

பின் விசாரணையின் போது காரில் பயணம் செய்த அஸ்வின்ராஜ், பாலாஜி பிரசாந்த், மதன் என்ற 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்துள்ளது. மேலும் காரில் பயணம் செய்த விஷ்ணு பலத்த காயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், யாமனத் என்ற இளைஞர் மிகவும் ஆபத்தான நிலையிலும் சென்னை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து விபத்தில் உயிர் இழந்த 3 பேரின் சடலங்களை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசாரால் அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை புளியந்தோப்பில் உள்ள பிரியாணி கடைக்கு இரவு பிரியாணி சாப்பிடுவதற்காக, காரில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேனில் இருந்தவர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இரவு பிரியாணி சாப்பிடுவதற்காக காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அனைத்து சாதியினரும் முன்னேற வேண்டும் என்பதே 'மனித நேயம் அறக்கட்டளை' நோக்கம்: சைதை துரைசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.