ETV Bharat / state

தென் மாவட்டங்களில் தொடர் கன மழை.. அரக்கோணத்தில் இருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 2:20 PM IST

National Disaster Response Force: தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

National Disaster Response Force rushed to southern districts due to heavy rains
கனமழை பெய்து வருவதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்

கனமழை பெய்து வருவதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்

வேலூர்: தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மேலும் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

மேலும் விவரங்களுக்கு mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையின் 25 பேர் கொண்ட நான்கு குழுக்களைச் சேர்ந்த 100 வீரர்கள் செல்கின்றனர். மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டுச் சென்றன என அரக்கோணம் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் விடிய விடிய கனமழை.. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.