ETV Bharat / state

இளைஞரை கார் ஏற்றி கொலை செய்த கும்பல்: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை வீச்சு!

author img

By

Published : Mar 24, 2020, 8:13 AM IST

ராமநாதபுரம்: மணல் கடத்தல் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக எண்ணி இளைஞர் ஒருவரை அந்தக் கும்பல் கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞர்
உயிரிழந்த இளைஞர்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் வைரவகேசு. கட்டட ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் அரவிந்தன் (22). பட்டதாரியான இவர் தந்தைக்கு தொழிலில் உதவியாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சோழாந்தூர் பகுதியில் மணல் கடத்தியது தொடர்பாக பெருங்குளத்தைச் சேர்ந்த பாலா, சரவணன் ஆகியோரை கடந்த சில நாள்களுக்கு முன்பு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். மணல் கடத்தல் குறித்து காவல் துறையினருக்கு அரவிந்தன்தான் தகவல் தெரிவித்துள்ளதாக மணல் கடத்தல் கும்பல் நினைத்துள்ளது.

பின்னர், கைதான பாலா சில நாள்களுக்கு முன்பு பிணையில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் அரவிந்தனும், அவரது உறவினர் கல்யாணகுமார் என்பவரும் கடந்த மார்ச் 21ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளனர்.

அப்போது, ராமநாதபுரம்- தேவிபட்டினம் சாலையில் உள்ள சக்கரவாளநல்லூர் விலக்கில் சென்றபோது பின்னால் வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அரவிந்தன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை பெற குடும்பத்தினரும், உறவினர்களும் மறுத்துவிட்டனர்.

மேலும், அரவிந்தனை கார் ஏற்றி கொன்றவர்களை கைது செய்யக் கோரி நேற்று அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரும், புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை பேச்சுவார்த்தை நடத்தியபின் அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் அரவிந்தனின் தந்தை வைரவகேசு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எஸ்.முருகபூபதி உள்ளிட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாரிடம் சென்று தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

பின்னர், காரை ஏற்றிக் கொலை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்பின் அரவிந்தனின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து குடும்பத்தினர் எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் தேவிபட்டினம் காவல் துறையினர், பெருங்குளத்தைச் சேர்ந்த சரவணன், தேவிபட்டினத்தைச் சேர்ந்த சேதுபதி, பெருங்குளத்தைச் சேர்ந்த பாலா, வாலாந்தரவையைச் சேர்ந்த சகோதரர்கள் இளசு என்ற இளையராஜா, மகேந்திந்திரன் ஆகியோர் மீது கொலை வழக்கு, தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய உறவினர்கள்

இதில் சரவணன் நயினார்கோவில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தேவிபட்டினத்தைச் சேர்ந்த சேதுபதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், பாலா உள்ளிட்ட மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பல்லடம் அருகே இரண்டாக வெட்டப்பட்டு இளம்பெண் எரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.