ETV Bharat / state

ஜெயலலிதாவை பின்பற்றியதால்தான் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி - ஆர்.எஸ்.பாரதி

author img

By

Published : Jul 8, 2023, 6:38 AM IST

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாஜகவை வன்மையாக சாடி, டிஐஜி விஜயகுமாரின் தற்கொலையை யாரும் அரசியலாக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Etv Bharatதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புதுகோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Etv Bharatதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புதுகோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு

புதுக்கோட்டை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செந்தில் பாலாஜி தொடர்பான விவகாரங்களில் ஆளுநரின் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “ஜெயலலிதா, டான்சி வழக்கில் நிலத்தை எப்படி ஒப்படைத்தாரோ, அதேபோல செந்தில் பாலாஜி தான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்.

ஜெயலலிதா வழியை அவரும் பின்பற்றியுள்ளார். ஜெயலலிதா வழியைப் பின்பற்றியதால் வந்த விளைவுதான் தற்போது செந்தில் பாலாஜிக்கும் நெருக்கடியைத் தந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது எல்லாமே அதிமுக ஆட்சி காலகட்டத்தில். எங்களுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. கருணாநிதி வழியில் செந்தில் பாலாஜி திருந்தி செயல்படுவார்.

மேலும், தற்போது செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து டெல்லி சென்றுள்ள ஆளுநர், ஆளுநராக திரும்பி வருகிறாரா என்பது வந்த பிறகுதான் தெரியும்” என பதிலளித்தார். பின்னர் கர்நாடகாவில் கூட்டணிக் கட்சிகளால் தற்போது இந்த பிரச்னை எழுந்துள்ளது என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தலில் மட்டும்தான் கூட்டணிக் கட்சியே தவிர்த்து மாநில உரிமைகளில் இல்லை. இது குறித்து நேற்று முன்தினம் துரைமுருகன் டெல்லிக்கு சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும், ஜல்ஜீவன் திட்ட அமைச்சரையும் சந்திந்து பேசியுள்ளார்.

மத்திய அமைச்சர் இந்த விவகாரத்தில் நியாமான முடிவை எடுப்பார் என நம்புகிறோம். எங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள கருத்து தவறானது. எடப்பாடி எப்போது உண்மை பேசி இருக்கிறார்?” என்றார்.

பின்னர் அண்ணாமலை குறித்து உங்களுடைய கருத்து தீவரமடைந்துள்ளதையடுத்து விளக்கம் கேட்கப்பட்டதற்கு, “நான் ஆடு என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அப்போது ஆட்டுக்குட்டி என்றால் நான்தான் என்பதை அண்ணாமலை ஒத்துக் கொள்கிறாரா? நான் உதைப்பேன் என்று யாரையும் சொல்லவில்லை. அண்ணாமலை கை அரிவாள் பிடித்த கை என்றால், எங்களது கை பேனா பிடித்த கை. எங்களுக்கு எழுத மட்டுமே தெரியும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடந்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்தான் வழக்கு தொடர்ந்தேன். அதன் பின் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். தற்போது எடப்பாடி விருப்பபடி தமிழ்நாடு காவல் துறையே இந்த வழக்கை விசாரிக்கட்டும் என்று கூறினேன்.

ஆனால், எடப்பாடி மேல் உள்ள வழக்கை நான் வாபஸ் வாங்கவில்லை. தமிழ்நாடு ஆளுநருக்கான முற்றுப்புள்ளியை அவரே வைத்துக் கொள்வார் என நினைக்கிறேன். தற்போது டெல்லி சென்றுள்ள அவர், ஆலோசனை பெற்று வருகிறாரா அல்லது ஆளுநராக திரும்ப வருகிறாரா என்பது வந்த பிறகுதான் தெரியும்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து டிஐஜியின் தற்கொலை குறித்து கேட்டதற்கு, “டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை வழக்கு விசாரணையில் பல மர்மங்கள் உள்ளது. முதற்கட்ட விசாரணை முடிந்த பிறகுதான் அதற்கான உண்மையான காரணம் தெரியும். அதற்கிடையில் இதை அரசியல் ஆக்கக்கூடாது. இந்த தற்கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு எந்த வழக்கையும் கண்டுபிடிக்கவில்லை.

மத்திய அரசுக்கு வெளிநாட்டு எதிரிகளை முறியடிப்பதற்கு எப்படி கப்பற்படை, ராணுவம், விமானப்படை ஆகிய மூன்று படைகள் உள்ளதோ, அதேபோன்று உள்நாட்டு எதிரிகளை பழிவாங்குவதற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை பயன்படுத்தப்படுகிறது.

ஆளுநர் முன்னாள் அமைச்சர்களின் வழக்கை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நேற்று பொய்யான பத்திரிகை செய்தியைக் கொடுத்து மாட்டிக் கொண்டு விட்டார். அதிலிருந்து தப்பிப்பதற்குதான் தற்போது டெல்லி சென்றுள்ளார்” என கூறினார்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் சென்ற முதியவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு.. 4 மணிநேரம் மருத்துவர்கள் வரவில்லை என புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.