ETV Bharat / state

'விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் - விதைகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது'

author img

By

Published : Sep 29, 2020, 12:02 PM IST

புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வீடியோ வாயிலாக மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னதாக விவசாயிகளிடமிருந்து பயிர் கடன், நீர்ப்பாசன கடன், வேளாண் கருவிகள் வழங்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 39 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. தகுதியுடைய மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2020-21ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முடிய நெல் 5,214 ஹெக்டே பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1,2867 ஹெக்டேர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 1,478 ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 7,492 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு 950 ஹெக்டே பரப்பளவிலும், தென்னை 10,690 ஹெக்டே பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 166.92 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 29.150 மெட்ரிக் டன் பயறு விதைகளும், நிலக்கடலை 14.746 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 11.555 மெட்ரிக் டன், எள் விதைகள் 0.840 மெட்ரிக் டன் விதைகளும் இருப்பில் உள்ளது.

விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு, தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் வழங்கிடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்கத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 2,563 மெட்ரிக் டன்னும், டிஏபி 1,762 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,435 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 4,188 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்கள், உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு இந்த உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

விவசாயிகளுக்குத் தேவையான நெல் நுண்ணூட்டச் சத்து 32.10 மெட்ரிக் டன்கள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும் பொழுது கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு சென்று தங்களது கைரேகையினை பதிவுசெய்து உரம் வாங்கிடவும், மண்வள அட்டையில் பரிந்துரை செய்துள்ள உர அளவினை வாங்கி பயன்பெற வேண்டும். தமிழ்நாடு அரசின் வேளாண் நலத்திட்டங்களை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.