ETV Bharat / state

தூய்மைப் பணியாளர் உயிரிழப்பில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது - தேசிய தூய்மை பணியாளர் ஆணையர் தலைவர் பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 1:43 PM IST

National Sanitation Staff Commission: மாநில அளவிலான தூய்மைப் பணியாளர்களுக்கான ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், கழிவுகளை அகற்ற இயந்திரங்களை வாங்க வேண்டும் என்றும், ஒப்பந்த பணியாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்றும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய தூய்மை பணியாளர் ஆணையர் தலைவர் வெங்கடேசன்
தேசிய தூய்மை பணியாளர் ஆணையர் தலைவர் வெங்கடேசன்

புதுக்கோட்டை: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தூய்மைப் பணியாளர்கள் நிலை எவ்வாறு உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன, அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து அரசு அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில், அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தூய்மை பணியாளர்களுக்கான ஆணையம்: இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், “தேசிய அளவில் தூய்மைப் பணியாளர்களுக்காக ஆணையம் ஒன்று இயங்கிக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் 11 மாநிலங்கள், குறிப்பாக கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மாநில அளவிலான தூய்மைப் பணியாளர்களுக்கான ஆணையம் உள்ளது.

தமிழகம்தான் முதலிடம்: தமிழ்நாட்டிற்கும் மாநில அளவிலான ஒரு ஆணையம் தேவை என்று ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளோம். மாநில அளவில் ஆணையம் இருந்தால் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும். ஆகவே, தமிழக அரசு மாநில அளவிலான ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். இந்திய அளவில் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது.

வங்கி கடன் கொடுக்கும் அமைப்பு: 1993ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 227 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர். இது பெருமைப்படுகிற விஷயம் அல்ல, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மாநில அளவிலான ஆணையத்தை அமைக்க வேண்டும். ஏற்கனவே நல வாரியம் உள்ளது. நல வாரியத்திற்கும், ஆணையத்திற்கும் வித்தியாசம் உள்ளது. தேசிய அளவில் தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கி கடன் கொடுக்கும் அமைப்பு உள்ளது. தமிழகத்திலும் அது போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.

ஒப்பந்தப் பணியாளர் முறையை ஒழிக்க வேண்டும்: தமிழகம் முழுவதும் தூய்மைப் பணிகளில் ஒப்பந்த பணி முறையை ஒழிக்க வேண்டும். இது தேவையில்லாத முறை. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். ஒப்பந்த முறையில் பணியாளர்களுக்கு முறையான ஊதியம், இ.எஸ்.ஐ (ESI) உள்ளிட்ட எந்த பலனும் கிடைப்பதில்லை. அரசால் ஒப்பந்த பணியாளர் முறையை ஒழிக்க முடியாவிட்டால், நேரடி சம்பளம் வழங்கும் முறையைக் கொண்டு வரலாம்.

கார்ப்பரேஷன் அமைக்கலாம்: அதேபோல, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் கார்ப்பரேஷன் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரு முறைகளை கடைபிடித்தால் 90 சதவீத பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்து விட்டால், அவரது பணியை அவரது வாரிசுகளுக்கு நிரந்தர பணியாகவே வழங்க வேண்டும்.

கழிவுகளை அகற்ற இயந்திரங்களை வாங்க வேண்டும்: ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதர்களே மனிதக் கழிவுகளை அல்லும் நிலையை மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும், எடுத்து வருகிறது. கழிவுகளை அகற்றுவதற்கு உடனடியாக இயந்திரங்களை வாங்க வேண்டும். கரோனா காலகட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டி தமிழக அரசு ஊக்கத்தொகைகளை அறிவித்திருந்தது.

குடியிருப்புகளை முறையாக கட்ட வேண்டும்: ஆனால், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இது முறையாக போய் சேரவில்லை. ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுவதால், தினசரி கூலி முறையாக வழங்கப்படுவதில்லை. குறைத்து தான் வழங்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புகளை முறையாக கட்டி, குடியேறும் வகையில் அமைத்து, அதன் பிறகு அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆய்வுக்கு சென்ற இடத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்.. வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.