ETV Bharat / state

சாதிய கொடுமைகளை களைந்திடுக - மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Dec 30, 2022, 5:23 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளை களைந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூ
மார்க்சிஸ்ட் கம்யூ

சாதியக் கொடுமைகளை களைந்திடுக - மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

இறையூர்: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தால் குழந்தைகள், முதியோர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் குடிநீர் தொட்டி பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தித் தர வேண்டுமென ஊர் மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி காவேரி நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் தீண்டாமை கொடுமைகள் நடக்காமல் இருக்கவும், அமைதியை பேணி பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தின் வேறு சில பகுதிகளில் இரட்டைக் குவளை முறை மற்றும் கோயிலுக்குள் பட்டியல் இன மக்களை அனுமதிக்காத சூழல் நிலவுவதாகவும், தீண்டாமை கொடுமை நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இறையூர் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக முதலமைச்சர் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கரோனா பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்ததால் பொங்கல் பண்டிகைக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நாங்களே கோரிக்கை விடுத்திருந்தோம். தற்போது அதுபோன்ற சூழல் இல்லை, அதனால் ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு நிச்சயம் பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் தொகையை முதலமைச்சர் வழங்குவார் என நம்புகிறோம் என்றார்.

இதையும் படிங்க: தேவாரம் திருமுறை பாடல்கள் பயிற்சி வகுப்பு - பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.