ETV Bharat / state

குறுஞ்செய்தி அனுப்பினால் வீடு தேடி வரும் காய்கறிகள்!

author img

By

Published : Mar 31, 2020, 7:00 PM IST

புதுக்கோட்டை: தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்படாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பொதுமக்களுக்கு வீடு தேடி வந்து காய்கறி வழங்கும் பணியை தொடங்கியுள்ளார்.

corona precautions taken by pudhukottai collector
corona precautions taken by pudhukottai collector

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட மச்சுவாடி அருகேயுள்ள முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 100க்கும் மேற்பட்ட முதியோர்கள், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி வழங்கினார். மேலும் அப்பகுதியில் நடமாடும் மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மருத்துவ முகாமும் நடைபெற்றது.

இந்த முகாமில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டனர். புதுக்கோட்டை நகரப் பகுதியில் அனைத்து இடங்களிலும் நிலவேம்பு கசாயமும், கபசுர குடிநீரும் வாகனம் மூலம் வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிகழ்வில் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறுகையில், 'புதுக்கோட்டையில் வீடுகளுக்கே சென்று காய்கறி வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. இதில் 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை காய்கறிகள், சமையலுக்கு தேவையான பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருள்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வருகின்றனர். அதை குறைப்பதற்காகவே இதுபோன்று வீடு தேடி காய்களை விற்பனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் 94436 75038 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் அவர்களுக்கு 100 ரூபாய், 150 ரூபாய் காய்கறி தொகுப்பு எது வேண்டும் என கேட்டபின்பு நேரடியாக வீடு தேடி வழங்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதிய முதியோர்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான கிருமிநாசினி மருந்துகள், முகக்கவசங்கள் இலவசமாக வழங்கி வருகின்றோம். அதேபோல் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், முதியவர்கள் காப்பகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முகக்கவசங்கள், கிருமிநாசினி, பழங்கள் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகின்றோம்.

மாவட்டத்தில் மொத்தம் 18 நடமாடும் வாகனங்கள் உள்ளன. அவற்றைக்கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிகார் மாநிலத்திலிருந்து புதுக்கோட்டைக்கு புகையிலை கம்பெனிக்கு வேலைக்கு வந்த இளைஞர்களுக்கு அடிப்படைத் தேவை அனைத்துமே ஏற்படுத்திக் கொடுக்கப்படும். தற்போது அந்தந்த முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்' என்றார்.

இதையும் படிங்க... காவலர்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.