ETV Bharat / state

ஊழியர் கல்யாணத்திற்கு கடல் கடந்து வந்த தொழிலதிபர்.. அரசு பள்ளிக்கு அள்ளிக்கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 8:29 AM IST

Updated : Sep 6, 2023, 4:00 PM IST

Singaporean businessman in pudukkottai: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் நடந்த தனது ஊழியரின் திருமணத்தை காண குடும்பத்துடன் கடல் கடந்து வந்த சிங்கப்பூர் தொழிலதிபர், திருமண பரிசாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார்.

Singaporean businessman in pudukkottai
தனது ஊழியரின் திருமண பரிசாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிங்கப்பூர் தொழிலதிபர்

புதுக்கோட்டை இளைஞரின் புதுவிதமான திருமணம்

புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே சின்ன அம்மங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் அமுதா தம்பதியரின் மகன் ஜெயப்பிரகாஷ். இவர் சிங்கப்பூரில் உள்ள ஆக்டிவ் ஃபயர் புரடெக்சன் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெயாபிரகாஷுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதனை அடுத்து திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உற்றார், உறவினர், நண்பர்களுக்கு திருமணத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், ஜெயப்பிரகாஷ் தன்னுடைய திருமணத்திற்கு வருமாறு தனது முதலாளியும், சிங்கப்பூர் தொழில் அதிபருமான டொமினிக் ஆங் பாவ் லெங்கிற்கு அழைப்பிதழ் கொடுத்து உள்ளார்.

அதனைத் தொடர்ந்து மணமகன் ஜெயப்பிரகாஷுக்கும் மணமகள் அன்புகனி என்பவருக்கும் ஊரணிபுரம் தனியார் மஹாலில் உற்றார் உறவினர் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஜெயாபிரகாஷின் திருமண விழாவில் கலந்து கொள்தற்காக சிங்கப்பூர் தொழிலதிபர் டொமினிக் ஆங் பாவ் தனது குடும்பத்தினருடன் தமிழகம் வந்து உள்ளார்.

தமிழகத்திற்கு வருகை தந்த டொமினிக் ஆங் பாவ் லெங் மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை, பட்டுப் புடவை அணிந்து திருமண விழாவில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து டொமினிக் ஆங் பாவ் லெங்-கை ஊரின் எல்லையிலிருந்து சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து செண்டை மேளம் முழங்க ஜெயபிரகாஷின் உறவினர்கள் பாரம்பரிய முறைப்படி கை கூப்பி வணங்கி, தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.

திருமணம் முடிந்த பிறகு மணமக்களை வாழ்த்திய டொமினிக் ஆங் பாவ் லெங் குடும்பத்தினர் அங்கு வந்திருந்த ஜெயபிரகாஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு பந்தியில் அமர்ந்து அசைவ உணவுகளை ருசித்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயப்பிரகாஷ் வீடு மற்றும் அந்த பகுதியை சிங்கப்பூர் தொழிலதிபர் டொமினிக் ஆங் பாவ் லெங் குடும்பத்தினர் சுற்றிப் பார்த்தனர்.

அதன் பின்னர் ஜெயப்பிரகாஷ் படித்த சின்ன அம்மங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்று, ஜெயபிரகாஷுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அங்கு பயின்று வரும் 65 மாணவர்களுக்கு ரூபாய் நான்கு லட்சம் மதிப்பீட்டில் லேப்டாப், ப்ரொஜெக்டர் மற்றும் ஸ்கிரீன் ப்ளே, பள்ளி மாணவர்களுக்குத் தேவையான புத்தகப்பை, நோட்டு, புத்தகங்கள், பேனாக்கள் ஆகியவற்றை வழங்கியதோடு அந்த பள்ளி மாணவர்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடி மகிழ்ந்தனர். மனிதநேயம் மரத்துப் போகும் இந்த காலகட்டத்திலும், தன்னிடம் பணி புரியும் ஊழியரின் அன்பை மதித்து சிங்கப்பூரில் இருந்து தனது குடும்பத்துடன் வருகை தந்து, திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல், தனது ஊழியர் சிறு வயதில் பயின்ற பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதைப் பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: கிருஷ்ணர் வேடமணிந்து நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் ஊர்வலம்..

Last Updated :Sep 6, 2023, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.