ETV Bharat / state

வெறித்த நிலத்தில் இயற்கை முறையில் திராட்சைப் பயிர்; கலக்கும் விவசாயி சுருளிராஜன்

author img

By

Published : May 31, 2020, 4:40 PM IST

பெரம்பலூர் அருகே மாவட்டத்திலேயே முதல்முறையாக இயற்கையான முறையில் திராட்சை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயி குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு...

organic grapes farming in perambalur
organic grapes farmer surulirajan

விவசாயத்தை முதன்மையாக கொண்டது பெரம்பலூர் மாவட்டம். இம்மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான மானாவாரி நிலங்கள் உள்ளன. மழையை நம்பியே சாகுபடி செய்யும் விவசாயிகள், பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம், பூக்கள் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக இயற்கை முறையில் நெல், சம்பங்கி பூக்கள், சிறு தானிய வகைகள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுவருகின்றனர். இதனிடையே, மாவட்டத்திலேயே முதல் முறையாக பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தில் இயற்கையான முறையில் திராட்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார் இயற்கை விவசாயி சுருளிராஜன்.

organic grapes farming in perambalur
இயற்கை திராட்சை

என்னென்ன செய்கிறார் விவசாயி சுருளிராஜன்...

பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தையொட்டி தன்னுடைய வயலில் இயற்கையான முறையில் திராட்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சுருளிராஜன், பத்து வருடங்களுக்கு முன்பு பாகற்காய், கத்தரிக்காய், புடலங்காய் உள்ளிட்டவைகளை உரங்கள் இட்டு சாகுபடி செய்து வந்தார்.

மனம் மாறிய சுருளி...

இதனிடையே, ஆரம்ப காலத்தில் மருந்துகள் தெளிக்கப்பட்டு சாகுபடியில் ஈடுபட்டு வந்த சுருளிராஜன், மக்களுக்கு நஞ்சில்லா உணவுகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இயற்கையான முறையில் எந்த ஒரு வேதிப்பொருளும் பயிர்களுக்கு இடாமல் சாகுபடி செய்து வருகின்றார்.

organic grapes farming in perambalur
விற்பனைக்காக திராட்சை அறுவடை செய்யப்படுகிறது

மேலும் இயற்கையான முறையில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருவதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றது. இதனால் எசனை வழியாக சேலம் செல்வோருக்கும், பெரம்பலூர் நோக்கி வருபவர்களும் திராட்சைப் பழத்தை வாங்கிச் செல்கின்றனர்.

வருவாய் ஈட்டித்தரும் இயற்கை விவசாயம்...

தற்போது கிலோ ரூ. 120 வரை விற்பனை செய்கின்றார். மேலும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றதால், அவர்களே திராட்சை பயிரிடப்பட்டுள்ள தங்களிடம் வந்து வாங்கிச் செல்வதாகவும் நல்ல வருவாயும் கிடைப்பதாக மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றார்.

organic grapes farming in perambalur
திராட்சைக் கொத்து

தன்னுடைய வயலில் 52 சென்ட் நிலத்தில் திராட்சை சாகுபடி செய்துள்ளார். தொடக்க காலத்தில் திராட்சை சாகுபடி செய்த பொழுது நல்ல விளைச்சல் இருந்தாலும், பொதுமக்களிடையே வரவேற்பு இல்லை என்று கூறும் இவர், தற்போது இயற்கையான முறையில் சாகுபடி செய்ததால் நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும் தெரிவிக்கிறார்.

கோடைக்கு உகந்த திராட்சை...

தற்போது கோடைகாலம் என்பதால் ஏராளமானோர் திராட்சையை வந்து வாங்கிச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி தன்னுடைய குடும்பத்தோடு இணைந்து திராட்சை சாகுபடியில் ஈடுபட்டு வரும் சுருளிராஜனுக்கு, அவருடைய பிள்ளைகள் விவசாயப் பணிகளுக்கு உதவி செய்கின்றனர்.

organic grapes farming in perambalur
திராட்சைத் தோட்டத்தில் விவசாயி சுருளிராஜன் மகள் ஹேமாவதி

கரோனா ஊரடங்கினால் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் தந்தைக்கு உதவி செய்வதாகவும், இயற்கையான முறையில் பொதுமக்களுக்கு நஞ்சில்லா பொருட்களை வழங்க வேண்டும் என்பதே தங்களுடைய விருப்பம் என்றும் சுருளிராஜனின் மகள் ஹேமாவதி தெரிவிக்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் திராட்சை பந்தலுக்கு மேலே போடும் வேலி கொடுக்கப்பட்டதாகவும், இருப்பினும் கூடுதலாக மானியம் வழங்கினால், தாங்கள் சாகுபடியை அதிகமாக்க உதவியாக இருக்கும் என்று சுருளி கோரிக்கை வைக்கிறார்.

இயற்கையாக திராட்சை விளைவிக்கும் சுருளிராஜன் குறித்த சிறப்புத் தொகுப்பு

மண்ணை மலடாக்கி, மக்களை சாகடிக்கும் வேதிப் பொருட்கள் இல்லாமல் விவசாயம் செய்துவரும் விவசாயி சுருளிராஜனும் ஒரு காக்கும் தெய்வம் தான்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.