ETV Bharat / state

நாமக்கல்லில் கல்லூரி முதல்வரை எதிர்த்து மாணவிகள் தர்ணா: ஏன்?

author img

By

Published : Dec 6, 2022, 4:31 PM IST

நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வரை மாற்றக்கோரி மாணவிகள் கல்லூரியின் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கலில் கல்லூரி முதல்வரை எதிர்த்து மாணவிகள் தர்ணா போராட்டம்
நாமக்கலில் கல்லூரி முதல்வரை எதிர்த்து மாணவிகள் தர்ணா போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு பெண்கள் கலைக் கல்லூரி திருச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 6,500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி முதல்வராக பால் கிரேஸ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் நாமக்கல் கல்லூரியில் பணியாற்றி வந்த போது கல்லூரியில் அம்பேத்கர் படத்தை அகற்றியது, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை தரக்குறைவாகப் பேசுவது உள்ளிட்ட செயல்கள் காரணமாக கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதன்பின் நீதிமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தடையாணையைப் பெற்று மீண்டும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் கல்லூரியில் வணிகவியல் மற்றும் பொருளாதாரத்துறையில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு நல்லுசாமி என்ற துறை தலைமைப் பேராசிரியர் மற்றும் உதவிப்பேராசிரியர் என இரண்டு பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்தச் சூழலில் நேற்று வணிகவியல் துறையின் தலைமைப் பேராசிரியர் நல்லுசாமி, தனது துறையில் பயிலும் மாணவிகளின் இன்டர்ன்ஷிப்புக்கு கையெழுத்து வாங்க கல்லூரி முதல்வர் பால் கிரேஸை சந்தித்துள்ளார். அங்கு நல்லுசாமியை கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் மாணவிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், எவ்வாறு இந்த கல்லூரியில் வேலை செய்கிறீர்கள் என கடிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கையெழுத்துப்போட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் வணிகவியல் துறை மாணவிகளும், துறையின் தலைமைப் பேராசிரியர் நல்லுசாமியும் காலை முதல் மாலை 6 மணி வரை கல்லூரி முதல்வர் பால் கிரேஸின் அலுவலகத்தின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.‌

மாலை 6 மணிக்கு மேல் மாணவிகளை மட்டும் உள்ளே அழைத்த முதல்வர் பால் கிரேஸ், துறைத் தலைவர் நல்லுசாமிக்கு எதிராக கடிதம் எழுதி கேட்டுள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த மாணவிகளை மிரட்டி கடிதம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் செய்வது அறியாமல் நின்ற துறைத்தலைவர் நல்லுசாமி மாணவிகள் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதன்காரணமாக இன்று பொருளாதாரம், வணிகவியல், ஊட்டச்சத்து துறையைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து முதல்வர் பால் கிரேஸை மாற்றக்கோரி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து கல்லூரி முதல்வர் பால் கிரேஸிடம் கேட்டபோது, ’போராட்டத்தில் ஈடுபடும் மாணவிகள் தனக்கு யார் என்றே தெரியாது. அவர்களை ஒரு சிலர் தூண்டி விட்டதாக’ குற்றஞ்சாட்டினார்.

தற்போது வரை கல்லூரி முதல்வருக்கு எதிராக 5 துறைகளை‌ச்சேர்ந்த 600-க்கும்‌ மேற்பட்ட மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.