ETV Bharat / state

காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி உற்சாகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 7:56 PM IST

Thula Utsavam: மயிலாடுதுறையில் நடைபெற்ற ஐப்பசி மாத கடைமுக தீர்த்தவாரி உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நீராடி வழிபட்டனர்.

thula utsavam celebration in mayiladuthurai
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம்

காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம்

மயிலாடுதுறை: காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி, முப்பது நாட்கள் நடைபெறும் துலா உற்சவம் மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற விழாவாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகள் கூடி, கருமை நிறம் அடைந்த கங்கை முதலான புண்ணிய நதிகள் தங்களுக்கு விமோசனம் கோரி சிவபெருமானிடம் முறையிட்டன.

அப்போது, அவர் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தங்கி காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி விமோசனம் பெற அருளியதாகவும், அவ்வாறே காவிரியில் தங்கி புனித நீராடி வந்த கங்கை முதலான நதிகளுக்கு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று சிவபெருமான் காட்சியளித்து விமோசனம் அளித்ததாகவும் ஐதீகம்.

அந்த வகையில், இந்த ஐதீக விழா ஒவ்வொரு ஆண்டும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐப்பசி மாதம் 30 நாட்களும் மாயூரநாதர், வதான்யேஸ்வரர், ஐயாரப்பர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதிலும் குறிப்பாக, ஐப்பசி மாதம் 30ஆம் தேதி நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி உற்சவத்தில், காவிரியின் இரு கரைகளிலும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி செய்யப்பட்டு, அஸ்திரதேவருக்கு நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடுவர்.

அவ்வகையில், நிகழாண்டு கடைமுக தீர்த்தவாரி உற்சவம் இன்று (நவ.16) மதியம் நடைபெற்றது. காவிரியின் தென்கரையில் மாயூரநாதர், ஐயாரப்பர், துலாக்கட்டம் காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டனர். வடக்கு கரையில் வதான்யேஸ்வரர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட கோயில்களில் இருந்தும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.

தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள், தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை கடைமுக தீர்த்தவாரியில் நடைபெற்றது.

அப்போது அஸ்திரதேவர் காவிரியில் தீர்த்தம் அளித்தபோது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடினர். பின்னர் சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவையொட்டி மயிலாடுதுறை நகரம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில், மூன்று மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. தொடர்ந்து உடைமாற்றும் அறைகள், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு படையினர் ரப்பர் படகுகளில் ஆழமான பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும், கடைமுக தீர்த்தவாரிக்காக இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கூட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..! பாதையைக் கடக்க முடியாமல் தளிஞ்சி மலைக்கிராம மக்கள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.