ETV Bharat / state

40 ஆண்டுகளுக்குப் பின் நாகை - இலங்கை கப்பல் சேவை தொடக்கம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 12:43 PM IST

Nagapattinam to Sri Lanka ship service: 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

nagai-sri-lanka-ferry-service-starts-after-40-years
நாகை - இலங்கை கப்பல் சேவை தொடக்கம்

நாகை - இலங்கை கப்பல் சேவை தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகை - இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய "செரியாபாணி" கப்பல் 50 பயணிகளுடன் நாகையிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை துவங்கியது. ஏற்கனவே நாகையிலிருந்து இயக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் பயணிகள் கப்பல் தீ விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது மீண்டும் புதிதாக கப்பல் சேவை துவங்கப்பட்டிருப்பது, இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு நல்லுணர்வைப் பேணும் வகையில் அமைந்துள்ளது.

இதற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் நாகை துறைமுகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ரூ.25 கோடி மதிப்பீட்டில் "செரியாபாணி" என பெயரிட்டப்பட்ட கப்பல் கொச்சினில் இருந்து நாகைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கப்பலின் சோதனை ஓட்டம் நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சுமார் 60 கடல் மைல் நாட்டிகல் தூரத்திலுள்ள இலங்கை காங்கேசன்துறையை கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும்.

கப்பல் கட்டணம்: நாகையில் இருந்து இலங்கை செல்ல 6,500 ரூபாயுடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரி சேர்த்து ஒரு நபருக்கு 7,670 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கப்பல் சேவை துவக்க நாள் சலுகையாக, இன்று ஒரு நாள் மட்டும் நபர் ஒருவருக்கு ரூ.2,803 மட்டும் பயண கட்டணமாக 75 சதவீத சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

பயணம் மேற்கொள்வோர் பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் நாகை துறைமுகத்தின் உள்ளே அமைந்துள்ள பயணிகள் முனையத்தில் 50 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் கப்பல் போக்குவரத்து சேவையை முன்னிட்டு, பயணிகள் முனையத்தினை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று முதல் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.

மேலும், துறைமுகத்திற்குள் வரும் நபர்கள் அனைவரும் பலத்த சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல இலங்கையில் நடைபெறும் கப்பல் சேவை துவக்க விழா நிகழ்வில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் இணைந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த கப்பல் சேவை இன்று துவங்கியிருப்பது அனைவரும் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.