ETV Bharat / state

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி - பெண் வீட்டாருக்கு பயந்து எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்!

author img

By

Published : Apr 27, 2023, 10:22 PM IST

மயிலாடுதுறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஜோடி பெண் வீட்டார் அச்சுறுத்தலால் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா மூவலூர் மகாதானபுரம் கூட்டுறவு நகர் பகுதியைச் சேர்ந்தவர், முருகேசன். இவரது 19 வயது மகள் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் தீபன் (25). இவர் ரயிலடி பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

அப்போது, அந்த இளம்பெண், தீபன் கடைக்குச் செல்போன் ரீசார்ஜ் செய்யச் செல்லும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கம் காதலாக மாறியது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

இதனால், கடந்த 24ஆம் தேதி இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் கடலூர் மாவட்டம் சென்று அங்கே பதிவு திருமணம் செய்துகொண்டனர். மகளைக் காணவில்லை என பெண்ணின் பெற்றோர் விசாரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாற்று சமூகத்தைச் சேர்ந்தவருடன் இளம்பெண் சென்றதால் ஆத்திரமடைந்த பெற்றோர் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குத்தாலம் காவல் துறையினர் தீபன் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையறிந்த காதல் ஜோடி, நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர் உதவியுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். எஸ்.பி. நிஷா விடுமுறையில் இருப்பதால், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சதீஷ் விசாரணை மேற்கொண்டார். திருமண வயது குறித்து விசாரித்தபோது இருவரும் படிப்புச் சான்றிதழ்களை அளித்ததுடன், திருமணப்பதிவு சான்றிதழையும் அளித்தனர்.

அனைத்தையும் சரிபார்த்த காவல் துறையினர், தங்கள் சுய விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இளம்பெண் தன் காதல் கணவருடன் செல்ல விரும்பியதால் காவலர்கள் பாதுகாப்புடன் அவர்களை தீபனுடன் அனுப்பி வைத்தனர். காதல் ஜோடியினர் எஸ்.பி. அலுவலகத்திலிருந்து காரில் செல்லும்போது பெண்ணின் பெற்றோர் ஆவேசப்பட்டு 2 கி.மீ., தூரம் வரை அவர்களை துரத்திவிட்டு திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க: ரூ.44 லட்சத்துடன் கேஷியர் எஸ்கேப்.. சுற்றி வளைத்த போலீசார்.. வெளியான சிசிடிவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.