ETV Bharat / state

மாயூரநாதர் கோயிலில் செப்டம்பர் 3ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் - திருவாவடுதுறை ஆதீனம்

author img

By

Published : Apr 3, 2023, 3:16 PM IST

மாயூரநாதர் கோயிலில் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகப் பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.

Etv Bharat
Etv Bharat

மாயூரநாதர் கோயிலில் செப்டம்பர் 3ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் - திருவாவடுதுறை ஆதீனம்

மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் உள்ளது. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பார்கள். பார்வதி தேவி தான் கொண்ட சாபம் நீங்க மயில் உருவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டு, பாவ விமோசனம் பெற்ற தலம் என்பதால், இவ்வூர் மாயூரம், மாயவரம் என்றழைக்கப்பட்டு, தற்போது மயிலாடுதுறை என வழங்கப்பட்டு வருகிறது. இத்தலம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற பெருமைக்குரியது.

இக்கோயிலில் நடைபெறும் மிகப்பெரிய உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெறும் துலா உற்சவம் ஆகும். குறிப்பாக கடைசி 10 நாட்கள் தினசரி பஞ்சமூர்த்திகள் காவிரியின் தென்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவதுடன், 5ஆம் நாள் மயிலம்மன் பூஜை, 6ஆம் நாள் திருக்கல்யாணம், 9-ஆம் நாள் திருத்தேர் ஆகிய உற்சவங்கள் நடைபெற்று, 10ஆம் நாள் (அதாவது ஐப்பசி 30ஆம் தேதி) காவிரி துலாக் கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி நடைபெறும்.

இது தவிர, வைகாசி விசாக திருவிழா சிறப்புக்குரிய உற்சவம் ஆகும். இத்திருவிழாவில், கோயிலின் பிரம்மதீர்த்தத்தில் சுவாமி, அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் அபயாம்பிகை சந்நிதியின் இருபுறங்களிலும் நல்லத்துக்குடி கிருஷ்ண ஐயர் இயற்றிய ''அபயாம்பிகை சதகம்" என்ற 100 பாடல்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, அம்மனின் பெருமையைப் பறைசாற்றுகிறது.

சுவாமி சந்நிதியின் வெளிப்புறத்தில் உள்ள களஞ்சிய விநாயகர் அருகில் நாதசர்மா என்ற சிவபக்தர் ஐக்கியமாகியுள்ளார். இவரது மனைவி அனவித்யை சிவபெருமானை அனுதினமும் பூஜித்து, அம்பாள் கர்ப்பகிரகத்தின் பின்புறம் உள்ள சிவலிங்கத்தோடு ஐக்கியமானதால், இந்த சிவன் நாதசர்மா அனவித் யாம்பகை என்று அழைக்கப்படுகிறார். மேலும், இந்த சிவனுக்கு எந்த கோயிலிலும் இல்லாத முறையில் சிவலிங்க மேனிக்கு தினமும் புடவை மட்டுமே சாத்தப்படுகிறது.

திருக்கோயிலின் கிழக்குப்புறத்தில் 160 அடி உயரத்தில் 9 நிலை கொண்ட ராஜகோபுரம் சிற்ப வேலைப்பாடுகளுடன் கலை நயத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இக்கோயிலில் கடைசியாக திருவாவடுதுறை ஆதீனம் 23ஆவது குருமகா சந்நிதானம் அருளாட்சி காலத்தில் 2005ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இக்கோயிலில் அம்மனின் பெயராலேயே அபயாம்பாள் என்று அழைக்கப்படும் 53 வயதான யானை கடந்த 50 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊர் மக்களின் செல்லப்பிள்ளையாக விளங்கும் இந்த யானைக்கு பக்தர்கள் குளிக்க ஷவர் வசதி, கொட்டகையில் பெரிய மின்விசிறி, காலுக்கு வெள்ளிக்கொலுசு, அடையாள அட்டை பதக்கம், முகப்பட்டம் எனப் பல்வேறு வசதிகளை செய்து தந்து அவ்வப்போது யானையை அழகு பார்த்து வருகிறார்கள்.

கோயிலின் தல விருட்சமான மாமரம் ராஜகோபுரத்தின் வடக்குப் புறத்தில் அமைந்துள்ளது. கோயிலின் உள்ளே உள்ள குளம் பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. பிரம்மதேவன் தனது படைப்புத்தொழிலை மீண்டும் தனக்கு வர வேண்டி நீராடி மீண்டும் படைப்புத் தொழில் கைவரப்பெற்றதால், இக்குளம் பிரம்மதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. காவிரி துலாக்கட்டத்தின் நடுவில் உள்ள இடம் ரிஷபதீர்த்தம் என பக்தர்களால் வணங்கப்படுகிறது.

பல்வேறு சிறப்புகளை உடைய பழமை வாய்ந்த இக்கோயிலில் கடைசியாக 2005ஆம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு 2022ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. தற்போது திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் இன்று கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

அப்போது கோயிலில் நடைபெற்ற மகா பூர்ணாகுதியில் அவர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மாயூரநாதர் கோயிலில் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஓபிஎஸ் 2.0' டெல்டாவில் சுற்றுப்பயணம்.. உற்சாக வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.