ETV Bharat / state

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் கடைசி இடத்தில் உள்ளது மயிலாடுதுறை மாவட்டம் - அமைச்சர் மா. சு வருத்தம்

author img

By

Published : Mar 6, 2022, 9:31 PM IST

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் தொடர்ந்து கடைசி இடத்தில் இருந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கடைசி இடத்தில் மயிலாடுதுறை - மா சுப்பிரமணியம் வருத்தம்
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கடைசி இடத்தில் மயிலாடுதுறை - மா சுப்பிரமணியம் வருத்தம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அத்துறை சார்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து இன்று (மார்ச் 6) ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம், எருக்கூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர், அதனைத்தொடர்ந்து சீர்காழி வட்டார அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு இருந்த நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லலிதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

"மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரச்னை, கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் மக்கள் தொடர்ந்து தயக்கம்காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 92 விழுக்காடும், இரண்டாம் தவணை 73 விழுக்காடும் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 80 விழுக்காடும், இரண்டாம் தவணை தடுப்பூசி 56 விழுக்காடும் மட்டுமே செலுத்திக்கொண்டு தமிழ்நாட்டில் குறைந்த அளவு செயல்பாடு உள்ள மாவட்டமாக உள்ளது.

மனதுக்குக் குறையான செய்தி

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கடைசி இடத்தில் மயிலாடுதுறை மாவட்டம் - மா.சுப்பிரமணியன் வருத்தம்

மனதிற்குக் குறையான செய்தியாக இருக்கிறது. தடுப்பூசி மட்டும் தான் தொற்றுகளிலிருந்து மீண்டு வர ஒரேவழி என்பதை உணரவேண்டும். கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மீனவ மக்கள் தங்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தி உள்ளது எனக் கருதிக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அலட்சியம் செய்வதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மீனவப் பிரதிநிதிகளிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத்துறைக்கும் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவில் திமுகவும் திமுக கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ள நிலையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சரியான முறையில் கவனம் செலுத்தி, அடுத்தடுத்து வரும் தடுப்பூசி முகாம்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தி வெற்றிபெற வேண்டும்’ என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:ஜெயிக்க வைத்த மக்களுக்கு கறி விருந்து வைத்த சேர்மன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.