ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆன்மீக ஆட்சிதான் நடக்கிறது - தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 8:00 AM IST

MK Stalin in dharmapuram adhinam arts college function: தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், தருமபுரம் ஆதீனத்திற்கும் தங்களுக்கும் தமிழ் நட்பு மட்டு அல்ல, குடும்ப நட்பும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin spoke at the 75th annual Coral Festival of Dharmapuram Aadhinam Arts College Mayiladuthurai
ஆதீனத்திற்கும் எங்களுக்கும் தமிழ் நட்பு மட்டுமல்ல, குடும்ப நட்பும் உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சைவத்தையும், தமிழையும் பரப்பும் தொன்மை வாய்ந்த கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தால் மயிலாடுதுறையில் 1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் கல்லூரி கலைக்கல்லூரியாக வளர்ச்சியடைந்து, தருமபுர ஆதீன கலைக்கல்லூரி 75ஆம் ஆண்டு பவள விழா ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பவளவிழா நிறைவு நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக நேற்று (ஆகஸ்ட் 24) கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கல்லூரிக்கு வந்த முதலமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், “தருமை ஆதீனம் 25வது குருமகா சன்னிதானம் காலத்தில் தமிழ் கல்லூரியாக தொடங்கப்பட்டு, 26வதுகுருமகா சன்னிதானம் காலத்தில் கலைக்கல்லூரியாக உயர்ந்து தற்போது பவள விழா காணுகிறது.

ஆன்மீக ஆட்சி நடக்கிறது: 25ஆம் ஆண்டு வெள்ளிவிழாவின்போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டார். 50ஆம் ஆண்டு பொன்விழாவில் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டார். 75வது ஆண்டு பவளவிழாவில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி.

தருமை ஆதீன கல்லூரியில் ஒவ்வொரு 25 ஆண்டுகளுக்கும் திமுக ஆட்சி அமைந்திருக்கிறது. அடுத்த நூற்றாண்டு விழாவிற்கும் இவர்கள்தான் ஆட்சியில் இருக்க வேண்டும். ஆன்மீக ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். திருச்செந்தூர் பகுதியில் கேட்பாரற்று, ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துக்களை இந்த ஆட்சிக்காலத்தில்தான் முதலமைச்சர் செயல்பாட்டில் மிக விரைவாக நாம் கையப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.

கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி பெற பல குழுக்களுக்கு சென்று காலதாமதம் ஆகிக்கொண்டிருந்தது. தற்போது ஒரு குழுவில் 200க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேக அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 30க்கும் மேற்பட்ட சிவன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளோம்.

கிராமக் கோயில்களை மக்கள் மறந்து விடுகிறார்கள். கிராம மக்களின் வழிபாட்டை கொண்டுதான் பெரிய தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டுமென்ற நோக்கில் 80க்கும் மேற்பட்ட கிராமக் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளோம். கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதியோடு நிதியும் ஒதுக்கீடு செய்கிறார். நாங்கள் என்ன நினைக்கிறோமோ, அதனை முதலமைச்சர் செய்து கொடுக்கிறார்கள்.

நெருக்கடியான சோதனை காலங்களில் நானும், முதலமைச்சரும் பதவியேற்றோம். கரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு வேலை கொடுத்து பணிகளை செய்ததால்தான் இத்தனை கோயில்களுக்கு விரைவாக கும்பாபிஷேகம் செய்தோம். காலை உணவு திட்டத்தை முதலில் இங்குதான் தொடங்கினோம். அதனை தமிழக முதலமைச்சர் தற்போது தமிழ்நாடு முழுவதும் தொடங்கி விட்டார்கள்.

பவளவிழாவில் கலந்து கொள்வதற்கு 48 மணிநேரம்தான் கொடுத்து நாங்கள் செய்கிறோமா என்று சோதித்து பார்த்தார்கள். ஆனால், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஒத்துழைப்போடு இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தோம். நான்கு தலைமுறையாக முதலமைச்சர் குடும்பம் தருமை ஆதீனத்தோடு தொடர்பில் இருக்கிறது. முத்துவேலனார், கருணாநிதி, ஸ்டாலின், அவரது மகன் என்று நான்கு பேரும் இணைந்து, பிணைந்து செயல்படுவோம்” என்று கூறினார்.

தொடர்ந்து 75வது ஆண்டு பவளவிழா மலர் வெளியீடு மற்றும் திருக்குறள் உரைவளம் நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு, தருமையாதீன இணையதள பதிவகத்தினை தொடங்கி வைத்தார். அப்போது தருமபுர ஆதீனம் மடாதிபதி நினைவு பரிசு வழங்கியும், ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை முதலமைச்சரின் கழுத்தில் அணிவித்தார்.

பவள விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி: அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தருமை ஆதீன கல்லூரி முப்பெருவிழாவில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறோம். 16ஆம் நூற்றாண்டில் குருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டு, திருவெள்ளிபுத்தூரில் பிறந்து மதுரையில் ஞானம் பெற்று திருவாரூருக்கு வந்த குருஞானசம்பந்தர் உருவாக்கியது இந்த மடம். அன்று முதல் இன்று வரை ஆன்மீக பணிகளிலும், தமிழ் பணி, மருத்துவசேவை, கல்விப்பணி, அறப்பணி ஆகிய சமூக பணிகளில் தருமை ஆதீனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டுள்ளம் தொடர்ந்து தொய்வின்றி செயல்பட வேண்டும்.

  • இந்து சமய அறநிலையத் துறையில் நமது அரசின் செயல்பாடுகளை நீதிபதிகளே பாராட்டுகிறார்கள்! திருக்கோயில்களின் விடியலுக்கு வழிகாட்டியாக இந்த ஆட்சி உள்ளதை மடாதிபதிகளே அங்கீகரிக்கிறார்கள்!

    நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் ஆன்மீகப் பெரியோர்களும் தமிழ் மக்களும் நம்மை… pic.twitter.com/rRtDsckpWh

    — M.K.Stalin (@mkstalin) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1946ஆம் ஆண்டு தருமை ஆதீனம் 25வது குருமகா சன்னிதானம் தொடங்கிய இக்கல்லூரி, 1972ஆம் ஆண்டு நடந்த வெள்ளி விழாவில் கருணாநிதி கலந்து கொண்டார். பொன்விழா நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகனும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். பவள விழாவில் நான் கலந்து கொண்டு இந்த கலையரங்கில் உரையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு இங்கு பவளவிழா, இந்த முப்பெருவிழா கொண்டாடும் நேரத்தில் பவளவிழாவையும் கொண்டாடுகிறார்கள்.

வரும் செப்டம்பரில் திமுக பவளவிழாவை நாங்கள் கொண்டாட இருக்கிறோம். அந்த பவளவிழாவை கொண்டாடுவதற்கு முன்பு, உங்கள் பவளவிழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. கருணாநிதி படித்த பள்ளியில் தமிழ்ஆசிரியராக இருந்த தண்டபானிதேசிகர், இந்த கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார் என்ற சிறப்பு உண்டு. தருமை ஆதீன நட்பு, தமிழ் நட்பு மட்டுமல்ல எங்களுக்கு குடும்ப நட்பும் உண்டு.

தருமை ஆதீனத்திற்கு கட்டப்பட்ட 27 கோயில்களில் ஒன்றுதான், திருக்குவளை கோயில். எங்களுக்கும், தருமை ஆதீனத்திற்கும் குடும்பத் தொடர்பு உண்டு என்று கம்பீரமாகச் சொன்னேன். 1972ஆம் ஆண்டு இங்கு நடந்த வெள்ளி விழாவில் பேசிய கருணாநிதி, “நவகிரகங்களை ஒன்று சேர்த்து கும்பாபிஷேகம் செய்த நேரத்தில் கொடிமரத்தைச் சுற்றி பெண்கள் பாட்டு பாடுவது வழக்கமாம். அப்படி பாட்டு எழுதப்படாத சூழலில் அருகில் இருந்த எனது தாத்தா முத்துவேலிடம் பாட்டு எழுத கேட்டுள்ளார்கள்.

முத்துவேலர் பாட்டு எழுதி கொடுத்ததும், பெண்கள் பாடியிருக்கிறார்கள். அதன்பிறகுதான் கோயிலுக்கு நவகிரகங்களை கொண்டு சென்றதாக சிறுவயதில் கருணாநிதி பார்த்ததாக வெள்ளிவிழாவில் பேசியுள்ளார். திருக்குவளை கோயிலில் முத்துவேல் பணியாற்றியுள்ளார்.

தற்போது 27வது குருமகா சன்னிதானத்தை, நம்முடைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மூலமாக நமது குருமகா சன்னிதானத்தை பல்வேறு நிகழ்ச்சிகளில் சந்தித்து இருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாமும் என்ற திராவிடவியல் கருத்தில் எல்லாமும் அடங்கியிருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறையை மிகமிகச் சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், அன்னைத் தமிழ், 3 ஆயிரம் கோடி மதிப்பில் கோயில் நிலம் மீட்பு, அறநிலையத்துறை சார்பில் 10 கலைக்கல்லூரி கோயில் திருப்பணி ஒருங்கிணைக்க குழு, பழமையான கோயில்கள் சீர்செய்து கும்பாபிஷேகம் செய்ய உத்தரவு, திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு, தற்போது வரை 3 ஆயிரத்து 986 கோயில் திருப்பணி செய்ய அனுமதி, ஆயிரம் ஆண்டிற்கு மேற்பட்ட பழமையான 112 திருக்கோயில்கள் சீர்செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு, இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 கோயில்கள் திருப்பணி செய்ய அனுமதி அளித்து அறநிலையத்துறையை காத்து வரும் ஆட்சிதான் திமுக ஆட்சி. அதனை மக்கள் அறிந்து கொண்டு வாழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்: நீதிபதிகள், அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளை பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் செயல்பாடு ஆட்சிக்கு மட்டுமல்ல, திருக்கோயில்கள் விடியலுக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்று பல்வேறு மடாதிபதிகள் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் என்ற அடிப்படையில் இன்று (ஆகஸ்ட் 25) காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கருணாநிதி படித்த திருக்குவளை பள்ளியில் நான் தொடங்கி வைக்கிறேன்.

மக்களுக்கான திட்டம்தான் காலை உணவுத்திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஏங்கும் ஒரு கூட்டம்தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி கவலை இல்லை. தருமை ஆதீனம் போன்று நல்லிணக்க சகோரத்தை விரும்பும் குருமகா சன்னிதானம் போன்றவர்கள் தமிழ்நாட்டில் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது எங்களுக்கு போதுமானது. நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பண்பாட்டிற்கும் ஆபத்து வரும்போது எல்லாம் ஆன்மீக பெரியவர்கள் அதற்கு எதிராக போராடி இருக்கிறார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ் காக்கும் போராட்டம், சமூக சீர்திருத்த போராட்டம், இனம், மொழி, நாட்டு உரிமை காக்க ஆன்மீக ஆளுமைகள் தங்கள் பங்களிப்பை கடந்த 100 ஆண்டுகளாக செலுத்தியதை போலும், இன்றைய ஆன்மீக ஆளுமைகளும் பங்களிக்க வேண்டும். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். இது போன்ற தமிழ் மடங்கள் எந்த நோக்கத்திற்காக 400ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டதோ, அதன் நோக்கம் நிறைவேறும்.

மாணவர்கள் கல்வியில் அதிக உயரங்களை அடைய வேண்டும். சந்திராயன் 3 விண்கலம் தரையிறங்கியதால் இந்திய நாட்டை உலகமே திரும்பி பார்க்க வைத்துள்ளது. சந்திராயன் 3 திட்ட இயக்குநராக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல். அவர் அரசுப் பள்ளியில் பயின்று உயர்ந்து இருக்கிறார். அவரைப் போன்ற கல்வியாளர்களை கல்வியில் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு, கல்வியில் சாதனை படைக்க வேண்டும்.

உங்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் எங்களிடம் தயங்காமல் சொல்லுங்கள். நிறைவேற்றித்தர தயாராக இருக்கிறோம். இது எனது அரசு அல்ல, நமது அரசு” என்றார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ‘தேவையில்லாத விஷயங்களில் தலையிடும் இந்து சமய அறநிலையத்துறை’ - பாரத இந்து மகா சபா எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.