ETV Bharat / state

சிறுமி திடீர் தற்கொலை: 5 நாள்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு

author img

By

Published : Nov 2, 2020, 10:39 PM IST

மயிலாடுதுறை : தரங்கம்பாடி அருகே அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகச் சிறுமியின் குடும்பத்தினர் பெரம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சிறுமியின் உடல் ஐந்து நாள்களுக்குப் பிறகு தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

buried body of girl autopsied after five days
தரங்கம்பாடி அருகே சிறுமி திடீர் தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வசித்துவருபவர் குமுதம். துப்புரவுப் பணியாளரான இவருக்கு ஆறு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது கடைசி மகள் சிறுமி கவிதா (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) பத்தாம் வகுப்பு படித்துவந்தார்.

ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் கவிதா வீட்டிலேய இருந்துள்ளார். இந்நிலையில் அதே தெருவைச் சேர்ந்த சங்கர் மகன் சிலம்பரசன் (19) என்பவரிடம் கவிதா பேசிக் கொண்டிருப்பதாகவும், கவிதாவை கண்டித்து வைக்கக் கூறி சிலம்பரசனின் உறவினர்கள் கவிதாவின் சகோதரர் சரத்குமாரிடம் கடந்த 27ஆம் தேதி போனில் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி கவிதாவின் தாயார் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், கவிதா வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து கவிதாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று ஊர்க்காரர்களிடம் கூறியுள்ளனர். ஊர் முக்கியஸ்தர்கள் புகார் அளிக்க தேவையில்லை என்று கூறியதால் புகார் கொடுக்காமல் 29ஆம் தேதி அரும்பாக்கம் ஆற்றங்கரை இடுகாட்டில் கவிதாவை அடக்கம் செய்தனர்.

கவிதா தற்கொலை செய்வதற்கு முன்பு சிலம்பரசனின் குடும்பத்தினர் கவிதாவின் வீட்டிற்கு வந்து சண்டையிட்டதை அறிந்த கவிதாவின் சகோதரர் சரத்குமார் பெரம்பூர் காவல் நிலையத்தில் தன் தங்கையின் சாவில் சந்தேகம் உள்ளதாகப் புகார் அளித்தார். இதற்கிடையில் அதே பகுதியில் உள்ள மணிகண்டன் என்பவரின் செல்போனில் அழைத்த அடையாளம் தெரியாத நபர் தான் துணை ஆய்வாளர் எனக் கூறி போனை இறந்துபோன கவிதாவின் குடும்பத்தினரிடம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்.

பிறகு புகாரை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டியுள்ளார். அந்த ஆடியோவை பெரம்பூர் காவல் நிலையத்தில் கொடுத்து கவிதாவின் உறவினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பெரம்பூர் காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து கவிதாவின் உடலை தரங்கம்பாடி வட்டாட்சியர் கோமதி முன்னிலையில் தோண்டி எடுத்து அதே இடத்தில் உடற்கூறாய்வு செய்து மீண்டும் புதைத்தனர்.

உடற்கூறாய்வு அறிக்கையின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க... தாய் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.