ETV Bharat / state

அமைதியா இருக்கீங்களா? இல்லை ரத்து செய்யவா? - அரசு விழாவில் சீறிய அமைச்சர் மெய்யநாதன்!

author img

By

Published : Jul 20, 2023, 6:28 PM IST

அமைச்சர் பங்கேற்ற அரசு விழாக்களில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர், திமுக மாவட்ட கவுன்சிலர் ஆகியோர் புறக்கணிக்கப்படுவதாக விழா அமைச்சரிடன் குற்றம்சாட்டினர். தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ‘அமைதியாக இருக்கிறீர்களா நிகழ்ச்சியை ரத்து செய்து விடவா’ என அமைச்சர் மெய்யநாதன் காட்டம் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

அரசு விழாவில் சீறிய அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு, திருமங்கலம், பொறையார் மற்றும் மங்கைநல்லூர் ஆகிய இடங்களில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் தலா 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, குத்தாலம் ஒன்றியம் மேல மங்கநல்லூரில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நிதியில் ரூபாய் 38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நான்கு பள்ளி வகுப்பறை கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான நிவேதா முருகன், மயிலாடுதுறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக் குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், விஜயகுமார் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், முதலாவதாக மணல்மேட்டில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து குறுவை தொகுப்பு திட்டத்தை விவசாயிகளுக்கு வழங்கினார். அப்போது தனக்கு தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு திறப்பு விழா நடைபெறுவதாக விழா நிகழ்வின் போது மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் நேரடியாக குற்றம்சாட்டினார்.

யாரிடம் சொல்லிவிட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தீர்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கடுப்பான அமைச்சர் மெய்யநாதன், ''எல்லோரும் அமைதியாக இருங்கள் இல்லையென்றால், அனைத்து நிகழ்ச்சியும் கேன்சல் செய்து விடுவேன்" என்று கூறியதுடன் மூன்றாவது கண்ணாக பத்திரிகையாளர்கள் பார்க்கிறார்கள் என்று சொல்லி மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினரை சமாதானம் செய்யும் விதமாக மரக்கன்று நட்டு வைக்கச் சொல்லி அவரது கையை பிடித்து இழுத்து சமாதானம் செய்தார்.

முதல் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினருடன் வாக்குவாதம் என்றால் அதன் தொடர்ச்சியாக அடுத்த நிகழ்ச்சியான திருமங்கலத்தில் நடைபெற்ற வேளாண்மை விரிவாக்க மைய கட்டட திறப்பு விழாவில், சொந்த கட்சிக்காரரான திமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரான சுரேஷ், ''நிகழ்ச்சிகள் குறித்து யாருக்கும் தகவல் சொல்வதில்லை; அழைப்பிதழில் எங்கள் பெயர் கூட போடுவதில்லை உள்ளாட்சி பிரதிநிதிகள் என்றால் அவ்வளவு கேவலமா?'' என்று அமைச்சர் முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் பொதுவெளியில் இதையெல்லாம் பேசாதீர்கள் என்று அவரிடம் கூறினார். அங்கேயும் சமாதானம் செய்த அமைச்சர், விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தை வழங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

இது குறித்து விசாரித்தபோது, மணல்மேடு வேளாண் விரிவாக்க மைய கட்டட திறப்பு விழாவிற்கு முன்பாக சட்டப்பேரவை உறுப்பினர் இந்த வார சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரலில் 21ஆம் தேதி மணல்மேடு கட்டடத்தை திறப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், சட்டப்பேரவை உறுப்பினருடன் கலந்து ஆலோசனை செய்யாமல் திறப்பு விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நிரல் பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டது. சமீபகாலமாக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரை திமுகவினர் புறக்கணித்து வருவதாக செய்திகள் வந்த நிலையில் அமைச்சர் முன்னிலையில் ஏற்பட்ட வாக்குவாதம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்; திண்டுக்கல் சீனிவாசன் உளறல் - அதிமுகவினர் கதறல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.