ETV Bharat / state

சீர்காழி சட்டநாதர் கோயிலில் 22 ஐம்பொன் சிலைகள், 462 செப்பேடுகள் கண்டெடுப்பு!

author img

By

Published : Apr 17, 2023, 8:40 PM IST

சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட 700 ஆண்டுகள் முந்தைய 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடங்கள், 462 செப்பேடுகள் உள்ளிட்டவைகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

Sirkazhi Chattanathar Temple 22 Aimpon idols, 462 coppers found
Sirkazhi Chattanathar Temple 22 Aimpon idols, 462 coppers found

சீர்காழி சட்டநாதர் கோயிலில் 22 ஐம்பொன் சிலைகள், 462 செப்பேடுகள் கண்டெடுப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைய வாய்ந்த சட்டநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான பணிகள் நேற்று (ஏப்.16)தொடங்கியது.

இதற்காக கோயிலின் மேற்கு கோபுர வாயில் அருகே நந்தவனத்தின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது மண்ணில் புதைந்திருந்த விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும், 55 பீடங்களும், பூஜை பொருட்கள் மற்றும் சீர்காழியில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் தாங்கிய 462 தேவார செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றை தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரம்மாசாரியர் நேரில் பார்வையிட்டு, அவைகள் எந்த காலத்துக்குரிய சிலைகள் எனக் கேட்டறிந்தார். இதுவரையில் இதுபோன்று, எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது சீர்காழி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இவை 700 ஆண்டுகள் முற்பட்டதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, ’மண்ணுக்கு கீழே கிடைக்கும் அனைத்து பொருட்களும் அரசிற்கு சொந்தமானது என்ற நிலை உள்ளது. எனவே, மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள், பூஜை பொருட்களை அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கிறோம். தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னர், மீண்டும் அவை கோயிலில் ஒப்படைக்கப்படும்’ எனவும் தெரிவித்தனர்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம், 'சிலைகளை சட்டநாதர் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைப்பதற்கும் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதற்கும் தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்' எனத் தெரிவித்தார்.

இதனை அடுத்து சட்டநாதர் கோயில் வளாகத்தில் மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைக்கப்பட்டது. இந்நிலையில் 'இன்று தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் உரியவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும்' என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார். மீட்கப்பட்ட சிலைகள் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்டக்குழுவை சேர்ந்த முனைவர்.தாமரை பாண்டியன் அறிவுறுத்தலின் படி ஒலைச்சுவடி ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுனர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ், குமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட 462 தேவார செப்பேடுகளை ஆய்வு செய்தனர். சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட அதிகாரிகள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கரடி அட்டகாசத்தால் வீட்டின் வளாகத்திற்குள் செல்ல முடியாமல் தவிக்கும் வயதான தம்பதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.